தேசியப் பாதுகாப்பு தொழிற்துறை கொள்கை:வெளிப்படையான கொள்முதல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்ய பிரதமர் அன்வார் உறுதி

21 ஜனவரி 2026, 6:32 AM
தேசியப்  பாதுகாப்பு தொழிற்துறை கொள்கை:வெளிப்படையான கொள்முதல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்ய பிரதமர் அன்வார் உறுதி

கோலாலம்பூர், ஜனவரி 21 – தேசிய பாதுகாப்புத் தொழிற்துறை கொள்கையானது (DIPN) வெளிப்படையான கொள்முதல் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதோடு, சிறந்த நிர்வாகம் மற்றும் நன்னடத்தை விதிகளின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு இராணுவத் தளவாடக் கொள்முதல் செயல்முறையிலும் ஊழல் மற்றும் தரகு (கமிஷன்) பெறும் கலாச்சாரத்தை ஒழிப்பதில் அரசாங்கம் காட்டும் உறுதியைப் பொறுத்தே நாட்டின் பாதுகாப்புக் கொள்கையின் செயல்திறன் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

"தனிப்பட்ட நலன்கள், கமிஷன் மற்றும் முறையற்ற சொத்துச் சேர்க்கை ஆகியவற்றில் நாம் இன்னும் சிக்கிக்கொண்டிருந்தால், ஒரு சிறந்த பாதுகாப்புக் கொள்கையையோ அல்லது நவீன ஆயுதக் கொள்முதலையோ நம்மால் உறுதி செய்ய முடியாது. எனவே, பாதுகாப்பு அமைச்சில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடைகள் தொடரும். இதேபோன்ற மாற்றங்கள் உள்நாட்டு விவகார அமைச்சு மற்றும் அது தொடர்பான ஏனைய ஏஜென்சிகளிலும் ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புத் தொழில் கொள்கை (DIPN) தொடக்க விழாவில் உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின், துணை அமைச்சர் அட்லி ஜஹாரி, தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் டத்தோ அஸ்ஹான் முகமட் ஒஸ்மான் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கையில், மலேசிய ஆயுதப்படை (ATM), அரச மலேசிய போலீஸ் படை (PDRM) மற்றும் ஊழல் புகார்கள் எழுந்த தொடர்புடைய ஏஜென்சிகளின் அனைத்து கொள்முதல் முடிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கொள்முதல் நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வரை இந்த முடக்கம் அமலில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.