2026/2027 கல்வியாண்டின் UPUOnline வழி உயர்கல்வி நிலையங்களுக்கு  ஜனவரி 29 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

22 ஜனவரி 2026, 4:24 AM
2026/2027 கல்வியாண்டின் UPUOnline வழி உயர்கல்வி நிலையங்களுக்கு  ஜனவரி 29 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

புத்ராஜெயா, ஜன 22- 2026/2027 கல்வியாண்டிற்கான பொதுத்துறை உயர்கல்வி நிறுவனங்களுக்கு (IPTA) UPUOnline வழியாக விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி மார்ச் 23-ஆம் தேதி வரை திறந்திருக்கும் என உயர்கல்வி அமைச்சு (KPT) இன்று அறிவித்துள்ளது.

மலேசிய கல்விச் சான்றிதழ் எஸ்.பி.எம்  (SPM) முடித்தவர்களுக்கும், மலேசிய உயர்கல்விச் சான்றிதழ் எஸ்.டி.பி.எம் (STPM) அல்லது அதற்கு இணையான தகுதி கொண்டவர்களுக்கான முதற்கட்ட விண்ணப்பங்களும் இந்தக் காலக்கட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

STPM அல்லது அதற்கு இணையான தகுதி கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 13 முதல் மே 15, 2026 வரை திறக்கப்படும் என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் நாடு முழுவதும் உள்ள 20 பொதுப் பல்கலைக்கழகங்கள் (UA), 36 தொழில்நுட்பக் கல்லூரிகள் (Politeknik), 106 சமூகக் கல்லூரிகள் (Kolej Komuniti) மற்றும் மாரா (MARA) கீழ் இயங்கும் இரண்டு உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள சான்றிதழ், அடிப்படை (Asasi), டிப்ளோமா மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையை உள்ளடக்கியது.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, விண்ணப்பதாரர்கள் 'யுபியூ ஆன்லைன்' (UPUOnline) தனித்துவ அடையாள எண்ணை (Pin Number) வரும் ஜனவரி 28-ஆம் தேதி முதல் பிஎஸ்என் (BSN) வங்கிக் கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

சேவை வரி உட்பட இதன் விலை RM10.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பின் எண்களை நாடு முழுவதும் உள்ள 387 பிஎஸ்என் கிளைகள், 843 தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் 'myBSN' இணைய வங்கிச் சேவை மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் உயர்கல்வித் துறையின் மாணவர் சேர்க்கைப் பிரிவை 03-8684 2363 என்ற எண்ணிலோ அல்லது upu@mohe.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.