இலவசக் காலை உணவுத் திட்டம்: சிலாங்கூரில் ஆகஸ்ட் முதல் 120,000 மாணவர்கள் பயன் பெறுவர்

16 ஜூன் 2026, 1:20 AM
இலவசக் காலை உணவுத் திட்டம்: சிலாங்கூரில் ஆகஸ்ட் முதல் 120,000 மாணவர்கள் பயன் பெறுவர்

ஷா ஆலம், ஜூன் 16 – சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டத்தின் (Selangor Resilience Enhancement Package) கீழ், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ள இலவசக் காலை உணவுத் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 120,000 பள்ளி மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.

இந்த நிதியுதவியும் திட்டமும் தகுதியுடைய உண்மையானப் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் (JPNS) அதிகாரப்பூர்வத் தரவுகளைப் பயன்படுத்தி, தகுதியான மாணவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த இலவசக் காலை உணவுத் திட்டமானது தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள், சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமயத் துறையின் (JAIS) கீழ் இயங்கும் சமயப் பள்ளிகள் மற்றும் மாநிலக் கல்வித் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களை உள்ளடக்கும் என்றார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு தகுந்த கால அவகாசத்தை எடுத்துக் கொள்வதாக அவர் விவரித்தார்.

நேற்று பிற்பகல் மாநிலச் செயலகக் கட்டடத்தில் இத்தொகுப்புத் திட்டத்தின் முதற்கட்டத்தை அமிருடின் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்கனவே மத்திய அரசின் உணவுத் திட்டத்தின் (RMT) கீழ் பலன் பெற்று வரும் சுமார் 55,000 மாணவர்கள் இந்த மாநில அரசின் புதிய திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தினார்.

மாநில அரசு செயல்படுத்தவிருக்கும் இந்த இலவசக் காலை உணவுத் திட்டத்தின் அமலாக்க முறை, தோராயமாகத் மத்திய அரசின் உணவுத் திட்டத்தை (RMT) போன்றே இருக்கும் என்றும், இதன் கீழ் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இத்திட்டமானது முக்கியமாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளிக்கு வரும் முன் காலை உணவு சாப்பிட முடியாத நிலையில் உள்ளவர்கள் மற்றும் தங்களின் பெற்றோர்கள் சுழற்சி முறையில் (Shift) வேலை செய்வதால் நேர நெருக்கடியைச் சந்திக்கும் பிள்ளைகள் போன்ற நலிவடைந்த பிரிவினரைக் குறிவைத்துச் செயல்படுத்தப்படுகிறது என்று அமிருடின் விளக்கினார்.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று, உள்ளூர் நகராண்மைக் கழகங்களின் வாயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலத்தின் 873 பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த இலவசக் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று மந்திரி புசார் அறிவித்திருந்தார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 131 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த இலவச உணவு முன்முயற்சி விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.