ஷா ஆலம், ஜூன் 15 – நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின உயர்வு காரணமாக, உணவு உதவி தேவைப்படும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டிற்கும் 2026ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், உதவி கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை 35 முதல் 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக 'தி லாஸ்ட் ஃபுட் புராஜெக்ட்' (The Lost Food Project) என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST) நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த அமைப்பு தற்போது மக்கள் வீட்டுவசதித் திட்டப் பகுதிகள் (PPR), தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் உள்ளிட்ட 180 இடங்களில் உள்ள 30,000 மேற்பட்ட பி40 (B40) நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இதன் மூலம் வாரம் தோறும் 150,000 அதிகமான உணவுகள் அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் பொது மேலாளர் ஸ்டூவர்ட் கால்வின், குறைந்த வருமானம் பெறும் சமூகங்களிடமிருந்து உணவு உதவிக்கான தேவை அதிகரிக்கும் இந்தப்போக்கானது 2024ஆம் ஆண்டிலிருந்தே மிக வேகமாக முடுக்கம் பெற்றுள்ளது என்றார்.
கடந்த 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உணவு உதவிக்கான தேவையில் 30% விழுக்காடு உயர்வு பதிவாகியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் தேவை மேலும் முடுக்கமடைந்து, தோராயமாக 35 முதல் 40% வளர்ந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளோம் என்றார்.
தங்களின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக உணவிற்காக மட்டுமே செலவழிக்கும் பி40 குடும்பங்களை, இந்த வாழ்க்கைச் செலவின உயர்வு தொடர்ந்து வதைத்து வருவதுதான் இத்தகைய நிலைக்கு முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது என்றும் அவர் விவரித்தார்.
மக்களுக்குத் தேவைப்படும் உணவை மீட்டு வழங்கும் உன்னத நோக்கில், கடந்த 16 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த லாப நோக்கற்ற உள்ளூர் அமைப்பு, கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் குப்பை கிடங்குகளில் அழுகிப் போகவிருந்த 2.9 மில்லியன் கிலோ கிராம் உணவை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருந்த பேராபத்தைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், உதவி தேவைப்படும் மக்களுக்கு 8.5 மில்லியன் உணவாகவும் அதனை மாற்றியமைத்து சாதனை படைத்துள்ளது.
இந்த அமைப்பு மீட்கும் உணவுகளைத் தங்களின் பரந்த விநியோகக் கட்டமைப்பு மூலம் பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 92 தொண்டு நிறுவனங்கள், ஜோகூர் பாருவில் பத்து நிறுவனங்கள் மற்றும் பினாங்கில் இரண்டு நிறுவனங்கள் எனப் பல தரப்பினருக்கு இந்த உணவுகள் விநியோகிக்கப்படுகின்றன.
மேலும், 28 தீவிரச் செயல்பாட்டு மையங்கள் மற்றும் 26 தற்காலிகத் துணைக் பயனாளிக் தளங்களிலும் இவ்வமைப்பு இயங்கி வருகிறது. தங்களின் இந்தச் சேவை உன்னதப் பணிகளை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தங்களின் குழுவினர் ஆராய்ந்து வருவதாகக் கால்வின் கூறினார்.
தாங்கள் விநியோகிக்கும் உணவில் 35% சூப் கிச்சன்கள் (Soup Kitchens), சிறுவர் காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகவும், மீதமுள்ள 65% உணவுகள் 50 மக்கள் வீட்டுவசதித் திட்டப் பகுதிகள் மற்றும் பி40 சமூகக் குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் நேரடியாக வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
இத்திட்டத்திற்கான உலர் உணவுப் பொருட்கள் 50க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மளிகைக் கடைகளிலிருந்து பெறப்படும் வேளையில், புதிய காய்கறி மற்றும் நுகர்வுப் பொருட்கள் கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையிலிருந்து பெறப்படுகின்றன.
உணவுகள் மட்டுமின்றி, பெண்களுக்குத் தேவையான மாதவிடாய் நப்கின்கள் (Sanitary Towels), பல் துலக்கிகள், ஷாம்பூக்கள் மற்றும் துப்புரவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய அல்லாத பிற பொருட்களையும் தாங்கள் விநியோகித்து வருவதாக ஸ்டூவர்ட் கால்வின் கூறினார்.







