ஷா ஆலம், ஜூன் 15 – எம்பிஐ அறக்கட்டளை, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை விளையாட்டு வீரர்கள், நோயாளிகள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு பின்னணிகளைக் கொண்ட சுமார் 5,000 பயனாளிகளுக்கு 500,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதியுதவிகளை வழங்கியுள்ளது.
இது குறித்துப் பேசிய எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர், பாதிக்கப்பட்ட மற்றும் உதவி தேவைப்படும் மக்களின் சுமையைக் குறைப்பதற்காகப் பேரிடர் நிதி, மக்கள் மேம்பாட்டு நிதி மற்றும் சக்காட் வகாலா நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் இந்த நிதியுதவிகள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அவசர உதவிகள் என்று வரும்போது அதிகமான பயனாளிகள் ஈடுபடுவதாலும், செலவுகள் அதிகமாக இருப்பதாலும், இந்த ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டில் பெரும் பகுதி பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இன்றைய தினம் மட்டும் 12 பயனாளிகளுக்கு உதவுவதற்காகத் தங்களின் அறக்கட்டளை 36,200 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். இந்தச் சிறு பங்களிப்பின் மூலம் அவர்கள் தங்களின் இலக்குகளையும் கனவுகளையும் அடைய முடியும் என்று தாங்கள் நம்புவதாக அவர் விவரித்தார்.
குறிப்பாக வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதால், அதற்குத்தான் பெரிய அளவிலான நிதி தேவைப்படுகிறது என்றும், இதுவரை பல்வேறு தேவைகளுக்காகச் சுமார் அரை மில்லியன் ரிங்கிட் வரையிலான நிதியைத் தாங்கள் விநியோகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இளம் மோட்டார் விளையாட்டு வீரர்களான ராய்கார்ல் அல்ஹாய் முகமட் ராஹிடி, முகமட் வாசிஃப் அம்ஸ்யார் மற்றும் கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட ரோஸியா ஜமால் உட்பட 12 பயனாளிகளுக்கான நிதியுதவிகளை அஹ்மட் அஸ்ரி அதிகாரப்பூர்வமாக எடுத்து வழங்கினார்.
இதற்கிடையில், இந்த நிதியுதவி குறித்துப் பேசிய இளம் வீரர் ராய்கார்ல் அல்ஹாயின் தந்தை முகமட் ராஹிடி, தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த நிதியானது அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ‘மலேசிய மோட்டோமினி’ சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றுகானப் பதிவு கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்றார்.
தனது மகன் ஆறு வயது முதல் இந்த மோட்டார் விளையாட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் இன்னும் உயர் நிலைப் போட்டிகளில் பங்கேற்பதற்கு அதிகளவிலான நிதிப் பங்களிப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் விவரித்தார்.
தற்போது ராய்கார்ல் ஒட்டுமொத்தப் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார் என்றும், அவர் ஏற்கனவே சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளில் விளையாடியுள்ளார் என்றும் பெருமிதத்துடன் கூறிய அவரது தந்தை, மோட்டோமினி போட்டியின் முதல் சுற்றில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்றும் குறிப்பிட்டார்.
மாநில அரசு வழங்கிய இந்த நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த ஆண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவிருக்கும் ராய்கார்லின் திறமையை உலக அரங்கில் வெளிக்கொணர இந்த உதவி பெரும் பக்கபலமாக இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.








