ஷா ஆலாம், ஆகஸ்ட் 11 - சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு மாநில அரசால் வழங்கப்படும் நிதியுதவிகள் முறையாகச் சென்றடைவது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருவதாக மனிதவள, வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினரான வீ. பாப்பராய்டு தெரிவித்தார்.
“கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13- ஆம் தேதியன்றே, மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்த நிதியுதவி முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. இதனை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் ஆவணங்களும் உள்ளன,” என அவர் தெரிவித்தார்.
அதையடுத்து, 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பள்ளிகளின் நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வியெழுப்பி தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
இன்று வெளியான அந்த செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை ஆகும்.
அவை மாநில அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான அர்ப்பணிப்பைப் பற்றித் தவறான பிம்பத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள், குறிப்பாக அரசின் நிதி ஒதுக்கீடு போன்ற முக்கியமான விவகாரங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது, சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெற்று, சரிபார்த்த பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தவறான தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, தமிழ்ப் பள்ளிகளின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் மாநில அரசின் நன்மதிப்பையும் பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், ஊடகங்களுக்கு தேவையான விளக்கங்களையும் துல்லியமான தகவல்களையும் வழங்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், சம்பந்தப்பட்ட நாளிதழ் நிர்வாகம் இவ்விவகாரம் தொடர்பான உண்மை நிலவரங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்து, வெளியிடப்பட்ட தவறான தகவல்களுக்கு உரிய மறுப்பையும் திருத்தத்தையும் வெளியிட வேண்டும் என பாப்பாராய்டு கேட்டுக்கொண்டார்.








