கிள்ளான், ஜூன் 15 – உலகளாவிய நிச்சயமற்றச் சூழலுக்கு மத்தியில், சர்வதேச உல்லாசக் கப்பல்கள் தங்களின் வழித்தடங்களைத் தென்கிழக்கு ஆசியாவை நோக்கி மாற்றி வருவதை, கிள்ளான் துறைமுக உல்லாசக் கப்பல் முனையம் (PKCT) தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வருகிறது.
இந்தக் கப்பல் வழித்தட மாற்றம், நாட்டின் உல்லாசக் கப்பல் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சி அடைவதற்குக் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது என்றும், அதன் மூலம் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் ஊக்கம் பெறும் என்றும் கிள்ளான் துறைமுக உல்லாசக் கப்பல் முனையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்வின் ஜாஃப்ரி அல்போன்சோ தெரிவித்தார்.
பல சர்வதேச உல்லாசக் கப்பல் நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தங்களின் பயணங்களை ரத்து செய்துவிட்டு, குறிப்பாகக் குளிர்காலத்தில் தங்களின் பயண அட்டவணையைத் தென்கிழக்கு ஆசியாவை நோக்கி மாற்றி அமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இந்த முனையத்தில் நடைபெற்ற ‘வைக்கிங் யிடுன்’ (Viking Yidun) சுற்றுலா விழிப்புணர்வுத் திட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆல்வின், குளிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயணிகளின் வசதிக்காகக் கப்பல்களை இயக்க முடியாத சூழல் ஏற்படுவதால், அவர்கள் தென்கிழக்கு ஆசியாவை நோக்கி வருகிறார்கள் என்றார்.
இதனால், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியை ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்காமல், அதன் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் ஈர்த்து, உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவே தாங்கள் பார்ப்பதாக அவர் விவரித்தார்.
எரிபொருள் விலை உயர்வால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கருத்துரைத்த ஆல்வின், உல்லாசக் கப்பல் நிறுவனங்கள் குறிப்பிட்ட கூடுதல் கட்டணங்களை விதிக்கக்கூடும் என்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள் தற்போதைய மோதல்கள் தொடங்குவதற்கு முன்பே 'ஹெட்ஜிங்' (Hedging) எனப்படும் முன்கூட்டிய விலை பாதுகாப்பு உத்தியை நடைமுறைப்படுத்தியுள்ளன என்றார்.
இந்த உத்தியின் மூலம் கப்பல்களுக்கான எரிபொருள் செலவு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிடுவதால், அவர்களின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டுச் செலவுகள் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், இந்த முன்கூட்டிய விலை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக உல்லாசக் கப்பல் பயணச்சீட்டுகளின் விலைகள் நிலையாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளையில், கடந்த ஆண்டு மொத்தம் 110 சர்வதேச உல்லாசக் கப்பல்கள் இங்கு வந்து சென்ற நிலையில், இந்த ஆண்டு ராணுவக் கப்பல்கள் உட்பட 130 முதல் 140 சர்வதேச உல்லாசக் கப்பல்கள் தங்களின் முனையத்திற்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக ஆல்வின் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 64,396 பயணிகளை ஏற்றி வந்த 42 உல்லாசக் கப்பல்கள் இந்த முனையத்தில் நங்கூரமிட்டுள்ளன என்ற புள்ளிவிவரத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
சிலாங்கூர் சுற்றுலா வாரியம் (Tourism Selangor) மற்றும் மலேசியச் சுற்றுலா வாரியத்துடன் (Tourism Malaysia) இணைந்து, தங்களின் முனையத்திற்கு வரும் கப்பல் நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதில் கிள்ளான் துறைமுக உல்லாசக் கப்பல் முனையம் உறுதியாக உள்ளது என்று ஆல்வின் ஜாஃப்ரி அல்போன்சோ தெரிவித்தார்.







