புத்ராஜெயா, ஜூன் 15 – உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலை மற்றும் எரிசக்தி விநியோக நெருக்கடிகளிலிருந்து அழுத்தங்களை எதிர்கொண்ட போதிலும், இந்த ஆண்டு முழுவதும் மலேசியாவின் பணவீக்க விகிதம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுக்குள் இருக்கும் என்று பொருளாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.
விலைவாசி உயர்வுக்கான அழுத்தங்கள் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பணவீக்கமானது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்க்கைச் செலவினங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாத வண்ணம் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அதன் அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசிர் தெரிவித்தார்.
தற்போது நாட்டின் பணவீக்க விகிதம் 1.9 விழுக்காடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இது உலகளாவிய பணவீக்கக் கணிப்பான 4.3 விழுக்காட்டை விட மிகக் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று நடைபெற்ற அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த 2026 ஆண்டிற்கு 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் பணவீக்கத்தை வைத்திருப்பதே தங்களின் இலக்கு என்றார்.
இந்த இலக்கின் மூலம் பணவீக்கத்தின் நகர்வுகள் தங்களால் எதிர்கொள்ளக்கூடிய அளவிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலும் அமையும் என்று அவர் விவரித்தார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத் தடைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் உணவுத் துறைகளில் அதன் தாக்கம் காரணமாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்படக்கூடிய பணவீக்க அழுத்தம் குறித்து அவர் கருத்துரைத்தார்.
தற்போதைய பணவீக்க அழுத்தம் முக்கியமாக எரிபொருள் விநியோகம் தொடர்பான செலவின உயர்வு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தக்கவைக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்படுகிறது என்று அக்மால் நஸ்ருல்லா கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு, இலக்கு நோக்கிய எரிபொருள் மானியங்களை வழங்குதல் மற்றும் மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) மூலம் தளவாடச் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, சிறு வணிகங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் வணிக நிதியுதவி உத்தரவாதத் திட்டம் (SJPP) மற்றும் மத்திய வங்கியின் (Bank Negara Malaysia) வசதிகள் மூலம் கூடுதலாக ஐந்து பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், உலகளாவிய நெருக்கடிகள் நீடித்தால் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், தற்போதைக்கு தங்களால் பணவீக்கத்தை 1.9 விழுக்காட்டில் தக்கவைக்க முடிந்துள்ள போதிலும், உலகளாவிய அழுத்தங்கள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
எனவே, முன்கூட்டியே தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக, அரசாங்கம் தொடர்ந்து அதிகாரப்பூர்வத் தரவுகளையும் தொழில்துறை மட்டத்திலான உண்மையான நிலவரங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசிர் தெரிவித்தார்.







