பராமரிப்புத் துறை நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத் துறையாக உருவெடுக்க வாய்ப்பு - அன்ஃபால் சாரி

12 ஜூன் 2026, 2:33 AM
பராமரிப்புத் துறை நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத் துறையாக உருவெடுக்க வாய்ப்பு - அன்ஃபால் சாரி

உலு கிள்ளான், ஜூன் 12: இதுவரை ஊதியம் வழங்கப்படாத வீட்டுப் பராமரிப்பு மற்றும் பணிகளுக்கு முறையான பொருளாதார மதிப்பு வழங்கப்படும் பட்சத்தில், உற்பத்தித் துறைக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத் துறையாகப் பராமரிப்புத் துறை (Care Sector) உருவெடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.

கசானா ஆராய்ச்சி நிறுவனம் (KRI) மற்றும் மலேசிய உத்திநோக்கு மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனம் (ISIS) ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின்படி, நாட்டில் ஊதியம் வழங்கப்படாத வீட்டுப் பராமரிப்பு மற்றும் பணிகளின் பொருளாதார மதிப்பு ஆண்டிற்குச் சுமார் 379 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகள், பராமரிப்புத் துறையை இனி வெறும் நலன்புரி கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது என்பதையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் ஒரு பெரும் காரணியாக இது திகழ்கிறது என்பதையும் நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வீடுகளில் பிள்ளைகள், முதியவர்கள் அல்லது சிறப்புத் தேவையுடையோரைப் பராமரிக்கும் பணிகள், சமூகத்தின் நல்வாழ்விற்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிக முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றன.

இந்தத் துறையின் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்துவதன் வழி, நாட்டின் முதன்மைப் பொருளாதாரப் பங்களிப்பாளராக இத்துறை மாற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்குள்ள ஃபிளமிங்கோ விடுதியில் நடைபெற்ற, 2026 சிலாங்கூர் சர்வதேச பராமரிப்பு கண்காட்சியின் (SICE) மாலை நேரத் தேநீர் விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

பராமரிப்பு மையங்கள் மற்றும் குழந்தைக் காப்பகங்கள் தங்களின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறவும் ஏதுவாக மாநில அரசு பல்வேறு நிதியுதவிகளை வழங்கி, இந்தத் துறையின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அன்ஃபால் கூறினார்.

இதன் மூலம், அதிகமான பராமரிப்பு மையங்கள் சட்டப்பூர்வமாகவும் பதிவு பெற்று இயங்குவதை ஊக்குவிக்க முடியும் என்றும், அதே வேளையில் இத்துறையின் தரவுகள் மற்றும் பரிவர்த்தனை மதிப்புகளை முறையாகப் பதிவு செய்ய வழிவகுக்கும் என்றும் அவர் விவரித்தார்.

எதிர்வரும் அக்டோபர் 15 முதல் 17 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெறவிருக்கும் 'SICE 2026' கண்காட்சியானது, முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பிராந்திய பராமரிப்புப் பொருளாதார மையமாகச் சிலாங்கூர் மாநிலத்தை நிலைநிறுத்துவதற்கும் ஒரு சிறந்த தளமாக அமையும் என்று அவர் மேலும் கூறினார்.

"Experience Care: Discover the Future of Care" எனும் கருப்பொருளைக் கொண்ட இக்கண்காட்சியில், குழந்தை பராமரிப்பு, முதியோர் நலம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு, உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு பராமரிப்புச் சேவைகள் தொடர்பான நவீன கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.