சுக்மா போட்டிகளுக்கான நிதி குறைப்பு, விளையாட்டு வீரர்களின் பயிற்சியைப் பாதிக்கவில்லை

7 மே 2026, 2:16 AM
சுக்மா போட்டிகளுக்கான நிதி குறைப்பு, விளையாட்டு வீரர்களின் பயிற்சியைப் பாதிக்கவில்லை

ஷா ஆலம், மே 7: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 2026 சுக்மா (SUKMA) விளையாட்டுப் போட்டிகள் சிக்கனமான முறையில் நடத்தப்பட்டாலும், சிலாங்கூர் மாநில விளையாட்டு வீரர்கள் தங்களின் பயிற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட போதிலும், மாநிலத்திற்குப் பெருமை தேடித்தரும் நோக்கில் வீரர்களின் அர்ப்பணிப்பு திருப்திகரமாக இருப்பதாக சிலாங்கூர் மாநில அணித் தலைவர் (Chef de Mission) அபாஸ் அஸ்மி தெரிவித்துள்ளார்.

இங்குள்ள விளையாட்டுச் சிறப்பு மையத்தில் சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தே மற்றும் சிலாட் போன்ற விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களைச் நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நிதி குறைப்பு குறித்த எந்தவொரு தாக்கமும் வீரர்களின் பயிற்சியைப் பாதிக்கவில்லை என்றும், அவர்கள் வழக்கம் போல தங்களின் திறனை மேம்படுத்தும் பணிகளில் மும்முரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுக்மா போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களின் இறுதிப் பட்டியல் ஜூன் மாத இறுதிக்குள் தயார் செய்யப்பட்டு, ஜூலை மாதத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மாநில விளையாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி பேசுகையில், 2026 சுக்மா போட்டிகளுக்கான அசல் ஒதுக்கீடான 100 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து சுமார் 50 சதவீத செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, தேவையற்ற செலவுகளைக் குறைத்து வீரர்களின் மேம்பாடு மற்றும் புதிய திறமைகளை அடையாளம் காண்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி நிலை சீரடையும் வரை மற்றும் ஷா ஆலம் அரங்கம் முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை இப்போட்டிகளை ஒத்திவைக்குமாறு மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்கள் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

22-வது சுக்மா விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா சுக்மா' (Para SUKMA) போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 10 வரை நடைபெறவிருக்கின்றன. 9 மாவட்டங்களில் உள்ள 52 அரங்குகளில் மொத்தம் 37 விளையாட்டுப் பிரிவுகளில் 474 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதேவேளையில், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் 10 விளையாட்டுப் பிரிவுகளில் 316 போட்டிகள் பாரா சுக்மா வீரர்களுக்காக நடைபெறவுள்ளன.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.