ஷா ஆலம், ஜூன் 14 — பந்திங், சுங்கை மங்கிஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் அருகிலுள்ள வடிகாலில், மூன்று மீட்டருக்கும் அதிக நீளமுள்ள முதலை ஒன்று புகுந்ததால் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமும் பரபரப்பும் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டுத் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் விடுத்துள்ள அறிக்கையில், இன்று காலை 9.07 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பந்திங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்குத் தலைமை தாங்கிய அதிகாரி அளித்த தகவலின்படி, சாலையோர வடிகாலில் சுமார் 10 அடி அல்லது 3 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள முதலை ஒன்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இந்த முதலை காணப்பட்டதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதனைப் பிடிக்கும் அதிரடிப் பணியில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக இறங்கினர்.
ஹைலக்ஸ் (Hilux) ரக நான்கு சக்கர வாகனத்தின் உதவியோடு, மொத்தம் எட்டு தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் இந்த ஆபத்தான மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் சாதுரியமான மற்றும் விரைவான நடவடிக்கையால் அந்த முதலை பத்திரமாகப் பிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் அல்லது உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று அகமட் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.








