கோலாலம்பூர், ஜூன் 14: பெட்டாலிங் ஜெயா, ஜாலான் புக்கிட் காசிங்கில் உள்ள ஒரு குழந்தை காப்பகத்திற்கு முன்பாகக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இரு இளம் பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தத் சம்பவம் குறித்துக் காலை 8 மணி 10 நிமிட அளவில் தங்களுக்குப் புகார் கிடைத்ததாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷம்சுடின் மாமட் தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதனைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அந்தப் பரிசோதனையின் முடிவில், கருச்சிதைவு (Miscarriage) ஏற்பட்டதன் காரணமாகவே அக்குழந்தை உயிரிழந்துள்ளது என்பதும், சடலமாக மீட்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அக்குழந்தை இறந்திருக்கலாம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் ஷம்சுடின் மாமட், கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் தீவிர விசாரணையின் அடிப்படையில், 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் சந்தேக நபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட அந்த இரு பெண்களுக்கும் இதற்கு முன் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என்றும், இக்கொடூரச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சில முக்கியத் தடயப் பொருட்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
இந்த வழக்கில் முக்கியத் தொடர்புடைய முதல் சந்தேக நபர் இரண்டு நாட்களும், இரண்டாவது சந்தேக நபர் மூன்று நாட்களும், அதாவது எதிர்வரும் திங்கட்கிழமை வரை காவல்துறையின் தடுப்பு காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையின் பிறப்பை ரகசியமாக மறைத்து, அதன் சடலத்தை யாருக்கும் தெரியாமல் வீசிச் சென்ற குற்றத்திற்காகத் தண்டனைச் சட்டப் பிரிவு 318-இன் கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்த பொதுமக்கள், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்குமாறு அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறையை 03-79662222 என்ற எண்களின் வழி தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு ஏசிபி ஷம்சுடின் மாமட் கேட்டுக்கொண்டுள்ளார்.







