'மைசலாம்' சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் பயன்

13 ஜூன் 2026, 2:35 AM
'மைசலாம்' சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் பயன்

கோலாலம்பூர், ஜூன் 13: மலேசிய நிதி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் 'மைசலாம்' (mySalam) சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 18 லட்சத்து 80 ஆயிரம் மலேசியர்கள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்ட மொத்தக் கோரிக்கைகளுக்கான தொகை 142 கோடியே 30 லட்சம் (RM1.423 billion) ரின்ஜிட்டை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 237 கோடி ரின்ஜிட் அரசாங்க ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், 'சும்பாங்கான் துனாய் ரஹ்மா' (STR) எனப்படும் ரஹ்மா ரொக்க உதவித்தொகை பெறும் தகுதியுடைய பயனாளிகளுக்கும், 65 வயது வரையிலான அவர்களின் துணைவியருக்கும் முழுமையான மருத்துவப் பாதுகாப்பை வழங்கி வருவதாகத் தகவல் தொடர்பு அமைச்சரும், மடணி அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கு மூன்று முக்கியப் பலன்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரிங்கிட் வீதம் 14 நாட்களுக்கு அல்லது ஆண்டுக்கு அதிகபட்சமாக 700 ரிங்கிட் வரை மருத்துவமனை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், 50 வகையான கடுமையான நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரே முறையில் (One-off) 8,000 ரின்ஜிட் வரையிலும், மருத்துவ உபகரணங்களுக்காக 30,000 ரின்ஜிட் வரையிலும் நிதி உதவி கோர முடியும் என்று அவர் விளக்கமளித்தார்.

தலைநகரில் நடைபெற்ற வாராந்திரச் செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர், மருத்துவமனை உதவித்தொகை பலனின் கீழ் இதுவரை 12 லட்சத்து 94 ஆயிரம் பயனாளிகளுக்கு 39 கோடியே 48 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேபோல், கடுமையான நோய் பாதிப்புக்கான நிதியுதவியின் கீழ் 89,085 பயனாளிகள் மொத்தம் 71 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரம் ரின்ஜிட் பெற்று பயனடைந்துள்ள வேளையில், மருத்துவ உபகரணங்களுக்கான பலனின் கீழ் 13,128 பயனாளிகளுக்கு 6 கோடியே 52 லட்சத்து 57 ஆயிரம் ரின்ஜிட் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

மைசலாம் திட்டத்தின் இந்தச் சிறப்பான செயல்பாடுகள் குறித்த அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மற்றொரு நிலவரமாக, உணவக மற்றும் கட்டுமானத் துறைகளில் நிலவும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, தோட்டத் தொழில் மற்றும் உணவுப் பொருட்கள் அமைச்சு, பொதுப்பணி அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சுகள், தங்களின் கீழ் உள்ள தொழில்துறைகளிடம் இருந்து முழுமையான மற்றும் விரிவான தகவல்களைப் பெற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், எதிர்காலத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இக்கோரிக்கைகள் குறித்து விரிவாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.