பராமரிப்புப் பொருளாதாரத்தை மேம்படுத்த தென் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து சிலாங்கூர் அரசு முயற்சி – அன்ஃபால் சாரி

12 ஜூன் 2026, 7:00 AM
பராமரிப்புப் பொருளாதாரத்தை மேம்படுத்த தென் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து சிலாங்கூர் அரசு முயற்சி – அன்ஃபால் சாரி

ஷா ஆலம், ஜூன் 12: சிலாங்கூர் மாநிலத்தின் பராமரிப்புப் பொருளாதாரத்தை (Care Economy) மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தென் கொரியாவைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணிக்கான வாய்ப்புகளைச் சிலாங்கூர் மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

தென் கொரியப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று சிலாங்கூர் மாநில அரசுடன் நடத்திய சந்திப்பின் போது, பராமரிப்புத் துறையின் மேம்பாடு குறித்த தங்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டதாகச் சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் யோங்காக் மருத்துவ அறக்கட்டளை, கியோங்ஜு மகளிர் தகவல் மேல்நிலைப்பள்ளி, ஏஎல் நெட்வொர்க்ஸ், ஜிசியோங் இன்ஜினியரிங் நிறுவனம், ஹான்ஷின் மருத்துவமனை மற்றும் ட்ரீம் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது ஷா ஆலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சமட்டும் உடனிருந்தார் என்று அன்ஃபால் சாரி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையானது புள்ளிவிவரத் தரவுகள், வெற்றிகரமான திட்ட அமலாக்கங்கள் மற்றும் பராமரிப்புத் துறையில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை விரிவாகப் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

குறிப்பாக, தென் கொரியாவில் மறுவாழ்வு மையங்களை (Rehabilitation centres) மேம்படுத்துதல், நீண்ட காலப் பராமரிப்புச் சேவைகள் மற்றும் சமூகம் சார்ந்த பராமரிப்பு மாதிரிகள் ஆகியவற்றில் அந்நாடு கையாண்டு வரும் தனித்துவமான அணுகுமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கேட்டறியப்பட்டது.

தென் கொரியாவின் இந்த நவீனப் பராமரிப்பு முறைகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளப் பல விஷயங்கள் உள்ளதாகவும், அவற்றில் பலவற்றைச் சிலாங்கூர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும் என்றும் அன்ஃபால் சாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பானது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்கான தளம் மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை உருவாக்குவதற்கும் வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ளும் முக்கியக் காரணியாக விளங்கும் ஆற்றல் இந்த பராமரிப்புத் துறைக்கு உண்டு என்று தாம் நம்புவதாகவும், இந்தத் தொடக்க முயற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழமாக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.