சிலாங்கூர் அரசின் புதிய முயற்சி: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 'தற்காலிக பராமரிப்பு நல மையம்' அமைக்கத் திட்டம்

22 ஏப்ரல் 2026, 8:23 AM
சிலாங்கூர் அரசின் புதிய முயற்சி: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான  'தற்காலிக பராமரிப்பு நல மையம்' அமைக்கத் திட்டம்

ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் மாநிலத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் (OKU) பராமரித்து வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு உந்துசக்தியாகத் திகழும் வகையில் 'தற்காலிக பராமரிப்பு நல மையம்' (Respite Care Wellness Hub) எனும் புதிய திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில், சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் ஷாஃபி நிகாஹ் எழுப்பிய கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த மாநில நலத்துறை ஆசிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி இத்தகவலை வெளியிட்டார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளையோ அல்லது முதியவர்களையோ தனியாகப் பராமரிக்கும் பெண்கள், அதன் காரணமாக எதிர்கொள்ளும் கடும் மன அழுத்தத்தைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என அவர் விளக்கினார்.

"இந்த நல மையமானது ஒரு பகல்நேர பராமரிப்பு மையமாக (Day Care) செயல்படும். இதன் மூலம், பராமரிப்பாளர்கள் தங்களின் குழந்தைகளையோ அல்லது முதியவர்களையோ மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை இம்மையத்தில் விட்டுவிட்டு, தங்களின் தனிப்பட்ட வேலைகளைக் கவனிக்கவும் அல்லது சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் வாய்ப்பு அமையும்," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிலாங்கூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் 'பிங்காஸ்' (BINGKAS) எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு வாழ்க்கை உதவித் திட்டத்திலும் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

முன்னதாக, இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு 18 வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால், தற்போது இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு, பராமரிப்பு தேவைப்படும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் ஒரு முன்னோடித் திட்டமாக இது தொடங்கப்படவுள்ளது. இந்த முயற்சி பராமரிப்பாளர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், பெண்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும், சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் ஒரு பாலமாக அமையும் என அன்ஃபால் சாரி மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.