கோலாலம்பூர், அக் 10 – பராமரிப்பு துறை நமது நாட்டின் பொருளாதாரத்திற்கும், நவீன வாழ்க்கை முறைக்கும் முக்கிய பங்காற்றுவதால், அதற்கான சமூக பார்வையை மாற்ற வேண்டியது அவசியம் என பெண்கள் முன்னேற்றப் பொறுப்பாளர் அன்பால் சாரி தெரிவித்தார்.
பராமரிப்பு என்பது அன்பின் பணியாக மட்டுமல்லாது திறனும், அனுபவமும் தேவைப்படும் தொழிலாக பார்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இது குடும்ப நலத்தையும் சமூக நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய துறையாகும். “முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் தொடர்ந்து பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்பவர்கள் இவர்கள்.
இவர்களின் பங்களிப்பு அதிகாரபூர்வமாக அளவிடப்படவில்லை என்றாலும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், மாநில அரசு பராமரிப்பாளர்களை சமூக முன்னேற்றத்தின் நண்பர்களாக அங்கீகரிக்கிறது, ஏனெனில் அவர்கள் அரசின் சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைப்பின் சுமையை குறைக்கும் வகையில் பங்கு வகிக்கிறார்கள் என்று அவர் கூரினார்.
“பராமரிப்பு என்பது திறமை, மனஉறுதி மற்றும் அர்பணிப்பு தேவைப்படும் வேலை. ஆகையால், அவர்களுக்கு பயிற்சி, உளவியல் ஆதரவு மற்றும் ஓய்வு நேரம் வழங்குவது அவசியம்.
பராமரிப்பாளர்கள் சோர்வோடு அல்லது தனிமையோடு வேலை செய்யக் கூடாது. எதிர்காலத்தில் பராமரிப்பு அமைப்பை, நாம் எவ்வாறு மதித்து ஆதரிக்கிறோம் என்பதில் தங்கியுள்ளது,” என்றார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், SICS மாநாடு பராமரிப்பு துறையில் முதலீட்டை ஈர்க்கவும், வலுப்படுத்தவும் சிறந்த தளமாக இருக்கும் என நம்பப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த மாநாடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பராமரிப்பு தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் அதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு முயற்சியாகும்.