ஏப்ரலில் மலேசியாவின் வேலையின்மை விகிதம் 3 விழுக்காடு - புள்ளியியல் துறை

11 ஜூன் 2026, 7:57 AM
ஏப்ரலில் மலேசியாவின் வேலையின்மை விகிதம் 3 விழுக்காடு - புள்ளியியல் துறை

புத்ராஜெயா, ஜூன் 11: மலேசியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 3 விழுக்காட்டை எட்டியுள்ளதாக மலேசிய புள்ளியியல் துறை (DOSM) இன்று வெளியிட்டுள்ள ஏப்ரல் மாதத்திற்கான தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. இதன் மூலம் நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 511,800-ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய 2.9 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தின் இந்த விகிதம் 0.1 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.

இந்த நிலை நடப்பு விகிதத்தை மீண்டும் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இருப்பினும், நாட்டில் வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தின் 16.8 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 0.1 விழுக்காடு உயர்ந்து 16.82 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று தலைமைப் புள்ளியியல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2026-இல் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் உள்ளவர்களில் 75 விழுக்காட்டினர் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பிரிவு 0.05 விழுக்காடு சற்று உயர்ந்து 12.61 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. அதே வேளையில், சுயதொழில் புரிபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.2 விழுக்காடு உயர்வுடன் 3.15 மில்லியனை எட்டியுள்ளது என்றார்.

வேலை செய்யத் தயாராக இருந்து, தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கையில் 79.5 விழுக்காடாக உள்ளனர் என்று டத்தோஸ்ரீ முகமட் உசிர் சுட்டிக்காட்டினார்.

இவர்களின் எண்ணிக்கை 0.3 விழுக்காடு அதிகரித்து 407,100-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிரமாக வேலை தேடுபவர்களில் 63.9 விழுக்காட்டினர் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்றும், அதே சமயம் 5 விழுக்காட்டினர் ஓராண்டிற்கும் மேலாக நீண்ட காலமாக வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள் என்றும் அவர் விவரித்தார்.

இதுதவிர, தங்களுக்கு தகுந்த வேலைகள் எதுவும் கிடைக்காது என்று நம்பி வேலை தேடுவதை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை 1.5 விழுக்காடு உயர்ந்து 104,700-ஆக அதிகரித்துள்ளது.

மலேசியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர் சந்தையின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தொழிலாளர் சந்தை மிதமான வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பது, நாட்டின் பொருளாதாரத்தின் நிலையான விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.

ஏப்ரல் மாதத்திற்கான தொழிலாளர் சந்தைப் பங்களிப்பு விகிதம் மாற்றமின்றி 70.9 விழுக்காடாகவே நீடிக்கிறது என்றும் டத்தோஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.