புக்கிட் மெர்தாஜாம், மே 27: கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் வேலையிழந்ததாகப் புகார் செய்யப்பட்டுள்ள 7,057 தொழிலாளர்களுக்கு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கம் உடனடி உதவிகளை வழங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குக், குறிப்பாக இளைஞர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்து தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (MTEN) கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் பேசுகையில், நாட்டிற்குள் வரும் புதிய முதலீடுகளுக்கும், மலேசியர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கும் இடையே மிகச் சிறந்த ஒருங்கிணைப்பு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றார். குறிப்பாக நாடு முழுவதிலும் உள்ள முக்கியத் தொழில்பேட்டைப் பகுதிகளில் இந்த ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"தற்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பேராக், பினாங்கு, கூலிம் ஹை-டெக் (கெடா), சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் போன்ற பகுதிகளுக்கு வரும் புதிய முதலீடுகளுடன் இந்த வேலைவாய்ப்புகளை நாம் சரியாக இணைக்க வேண்டும்," என்று விளக்கினார்.
"அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் நிலைமையைச் சீரமைக்கவும், குறிப்பாக இளைஞர்களுக்குப் பல புதிய வேலைகளை வழங்கவும் இதர நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் 5,855 ஆக இருந்த வேலையிழப்பு வழக்குகள், ஏப்ரல் மாதத்தில் 21 விழுக்காடு உயர்ந்துள்ளதாகப் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்துப் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
சந்தையில் தற்போது தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளுக்குப் பெரும் தேவை இருப்பதால், அரசாங்கம் இத்துறைகளில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் கூறினார். தேவைப்பட்டால், இளைஞர்கள் இந்த புதிய வேலைவாய்ப்புத் துறைகளில் நுழைவதற்கு ஏதுவாக அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஒட்டுமொத்த வேலையிழப்பு விகிதம் இன்னும் ஆபத்தான நிலையை எட்டவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீதான தாக்கத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கருதுகிறது என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
"ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை போனால் கூட அது கவலைக்குரிய விஷயம் தான். எனவே, எங்களால் இயன்றவரை இதற்குச் சிறந்த முறையில் தீர்வு காண முயன்று வருகிறோம்," என்றார்.








