கோலாலம்பூர், ஜூன் 12: டிஜிட்டல் அடையாளப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் ஏதுவாக, சுயசேவை மையங்களில் (Kiosks) உள்ள 'மைடிஜிட்டல் ஐடி' பதிவு முறைமை, முக அங்கீகார பயோமெட்ரிக் (Facial Biometric) சரிபார்ப்பு வசதியுடன் மேம்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) தெரிவித்துள்ளது.
இது குறித்துத் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிவரும் காலங்களில் பதிவுகளை மேற்கொள்ளும் போது, தேசிய பதிவுத் துறையின் (JPN) தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு, உடனுக்குடன் நேரடி முக அங்கீகார பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தனிநபர் அடையாளச் சரிபார்ப்பின் துல்லியத்தன்மையை அதிகரிக்கவும், அடையாளத் திருட்டு மற்றும் அனுமதியற்ற ஊடுருவல்களைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய பயனர் அடையாளங்களின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் தொடர்ந்து பேணுவதற்காக, ஏற்கனவே இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருபவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் முக அங்கீகார பயோமெட்ரிக் சரிபார்ப்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்து மைடிஜிட்டல் ஐடி கியோஸ்க்குகளிலும் இன்று காலை 6 மணி முதல் எதிர்வரும் ஜூன் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தற்காலிகப் பராமரிப்புப் பணியின் போது, பொதுமக்கள் தங்களின் கைபேசிகள் மூலமாகவே 'மைடிஜிட்டல் ஐடி' பதிவுகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம் என்று கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்காகப் பயனர்கள் தங்களின் ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகுள் பிளே அல்லது ஹுவாவே ஆப் கேலரி தளங்களின் வழியாக 'MyDigital ID' செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகள் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய மோசடிகள், ஆள்மாறாட்டம், தரவுத் திருட்டு மற்றும் சைபர் சுரண்டல் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து டிஜிட்டல் அடையாளங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
இச்சூழலில், பொது மற்றும் தனியார் துறை சார்ந்த பல்வேறு டிஜிட்டல் சேவைகளில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான அடையாளச் சரிபார்ப்பை வழங்குவதன் மூலம், 'மைடிஜிட்டல் ஐடி' நாட்டின் டிஜிட்டல் அடையாள சூழல் அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
குடிமக்களின் டிஜிட்டல் அடையாளங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, மைக்காட் (MyKad) உள்ளிட்ட பிற அடையாளச் சரிபார்ப்புத் தளங்களின் பாதுகாப்பு மேம்பாடுகளை ஒருங்கிணைக்கத் தொடர்புடைய முகமைகளுடன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






