சிங்கப்பூர், ஜூன் 11: மலேசியாவிலேயே மிக அதிகபட்சமாக, நடப்பு 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சிலாங்கூர் மாநிலம் 33.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த அபாரமான சாதனை, கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலம் ஈர்த்த ஒட்டுமொத்த 83 பில்லியன் ரிங்கிட் முதலீட்டில் ஏறக்குறைய 40 விழுக்காட்டிற்குச் சமமாகும் என்று சிலாங்கூர் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 9-ஆம் தேதியன்று இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor) மற்றும் சிங்கப்பூர் ஓசிபிசி (OCBC Singapore) வங்கி இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே மாநிலம் 33 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான முதலீட்டை எட்டியிருந்தாலும், முதலீட்டு மதிப்பை அவ்வாறு மட்டும் அளவிட முடியாது என்றும், அதற்குப் பின்னால் சில குறிப்பிட்ட ஒப்புதல்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன என்றும் விளக்கினார்.
இந்தச் சிறப்பான வேகத்தை மாநிலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் எனத் தாம் நம்புவதாகவும், சிலாங்கூர் எப்போதும் முதலீட்டிற்கான சிறந்த மாநிலமாகத் திகழ்வதை உறுதி செய்ய தாங்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில், இந்த முதலீடுகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மொத்த முதலீட்டு அளவில் சிலாங்கூர் மாநிலம் ஜோகூர் மாநிலத்திற்கு அடுத்தபடியாக இருந்தபோதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிலாங்கூரே முதலிடத்தில் இருந்தது என்றும், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 63,000 வேலை வாய்ப்புகள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் டத்தோ மந்திரி புசார் சுட்டிக்காட்டினார்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (MIDA) கடந்த ஜூன் 8-ஆம் தேதி வெளியிட்ட தரவுகளின்படி, சைபர்ஜெயா (Cyberjaya) பகுதியின் முதிர்ச்சியடைந்த உள்கட்டமைப்பு வசதிகளின் ஒருங்கிணைப்பே சிலாங்கூர் மாநிலம் இந்த மாபெரும் முதலீட்டு வெற்றியைப் பெறுவதற்குக் காரணியாக அமைந்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் நிலவிய போதிலும், தற்போதைய நேர்மறையான பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலம் இந்த ஆண்டு நிர்ணயித்துள்ள 60 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு இலக்கை நிச்சயம் எட்டும் என்று அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.
முதலீடுகளின் இந்த சீரான வளர்ச்சி, முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மலேசிய முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஆகியவற்றின் தொடர்ச்சியான கூட்டு முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.
மலேசிய புள்ளியியல் துறையின் தகவல்படி, கடந்த 2024-ஆம் ஆண்டில் 432.1 பில்லியன் ரிங்கிட் மொத்த உள்நாட்டு உற்பத்திப் (GDP) பதிவோடு சிலாங்கூர் மாநிலம் நாட்டின் முன்னணி பொருளாதார மாநிலமாகத் தன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தச் சாதனை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.2 விழுக்காடாகும். இதன் மூலம் தொழில்துறை மற்றும் சேவைத் துறையின் முக்கிய மையமாக சிலாங்கூர் திகழ்வது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு, சிலாங்கூர் மாநிலம் தேசிய சராசரியை விட அதிகமாக 6.3 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







