சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு

18 மே 2026, 2:04 AM
சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு

ஜோகூர் பாரு, மே 18 – சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஆண்டில் மட்டும் 80 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான முதலீட்டையும், 60,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

இது மாநில அரசின் சிறந்த நிர்வாக முறைக்கும் பொருளாதார மேல்நோக்கு வியூகங்களுக்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது எனச் சிலாங்கூர் மாநிலப் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் பாருவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த பொருளாதாரச் சாதனையின் காரணமாக, மலேசியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கும் முதன்மை மாநிலமாகச் சிலாங்கூர் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றார்.

மாநாட்டு மேடையில் திரண்டிருந்த பிரதிநிதிகள் மத்தியில் பேசிய அவர், "இந்த மாபெரும் வெற்றியானது வெறும் முதலீட்டுத் தொகையின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, சிலாங்கூர் மாநில அரசு கட்டமைத்துள்ள வலுவான மற்றும் வெளிப்படையான நிர்வாகத் தன்மையின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

மாநிலத்தில் முறையான அதிகாரச் சமநிலை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் (check and balance) மிகச் சரியாகச் செயல்படுகின்றன. இது வெறும் சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் மட்டுமல்லாது, பல்வேறு நிலைக்குழுக்கள் மற்றும் அரசாங்க அணுகுமுறைகளிலும் மிகக் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது," என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், மாநில அரசு துணிச்சலுடன் மேற்கொண்ட ‘பொருளாதார வியூக மாற்றங்கள்’ குறித்தும் அவர் விவரித்தார்.

"முன்பெல்லாம் மக்கள் நலன் சார்ந்த சில குறிப்பிட்ட அணுகுமுறைகள் வெறும் கவர்ச்சிகரமான (populist) திட்டங்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால், உண்மையாகவே உதவி தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கும், தகுதியும் திறமையும் வாய்ந்த உள்ளூர்த் தொழில்முனைவோருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்காக, சிலாங்கூர் அரசு இத்தகைய துணிச்சலான முடிவுகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது," என்றார்.

தொடர்ந்து பேசிய அமிருடின், சிலாங்கூர் மாநில அரசு முன்பு எடுத்த சில முடிவுகள் ஆரம்பத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறாதது போலவும், சவாலாகவும் தோன்றியிருக்கலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் அவை அனைத்தும் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

"மத்திய அரசாங்கம் அண்மையில் ‘பூடி மடாணி’ (BUDI MADANI) திட்டத்தின் கீழ் டீசல் மானிய மறுசீரமைப்பைக் கொண்டு வந்ததைப் போல, சிலாங்கூரிலும் நான் இலவசத் தண்ணீர் விநியோகத்திற்கான மானிய முறையை மறுசீரமைப்பு செய்தேன். அந்த மானியச் சீரமைப்பால் மாநில அரசுக்குக் கிடைத்த பெரும் சேமிப்புத் தொகை, தற்போது சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா’ (SARA) மற்றும் ‘சும்பாங்கான் துனாய் ரஹ்மா’ (STR) போன்ற பயனுள்ள நேரடித் திட்டங்களின் வாயிலாகத் தகுதியுடைய ஏழை எளிய மக்களுக்கே மீண்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளது," என்று அவர் விளக்கமளித்தார்.

சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களின் மிகச்சிறந்த மற்றும் திறமையான நிர்வாக முறைகள், தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் சிறந்த முறையில் வழிநடத்துவதற்காகப் புத்ராஜெயாவிற்கு (மத்திய அரசு) ஒரு முன்னோடியாகவும் மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கின்றன என்று சிலாங்கூர் மாநில முதலமைச்சருமான (Dato’ Menteri Besar) அமிருடின் ஷாரி புகழாரம் சூட்டினார்.

இதுதவிர, சிலாங்கூரில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ (Enakmen Kebebasan Maklumat) போன்ற முற்போக்கான கொள்கைகள், மாநில நிர்வாகத்தின் ஒட்டுமொத்தப் பரிணாமத்தையே மாற்றியமைத்துள்ளதால், இன்று பிற மாநிலங்களும் இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தங்களின் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன என்றார்.

"மாநிலச் சட்டமன்றத்தின் செயல்பாடுகளை முழுமையாக மாற்றி அமைத்ததே நமது மிகத் தெளிவான சாதனையாகும். சிலாங்கூரில் நாம் ‘செல்கேட்’ (SELCAT - Jawatankuasa Pilihan Khas Mengenai Keupayaan, Kebertanggungjawaban dan Ketelusan) எனப்படும் திறன், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான சிறப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம்.

ஆரம்பத்தில் இத்தகைய சீர்திருத்தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும், இணக்கமற்ற சூழலை உருவாக்கும் என்றும் பல்வேறு தரப்பினரால் அவதூறாகப் பேசப்பட்டன.

ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வமான மாற்றங்களின் மூலம் சிலாங்கூரின் நிர்வாகத்தை உலகத்தரத்திற்கு உயர்த்த முடியும் என்பதை நாம் இன்று நிரூபித்துக் காட்டியுள்ளோம்," என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.