‘ஓப்ஸ் திரிஸ் 4.0’ நடவடிக்கை: மானிய விலையிலான பெட்ரோல் முறைகேடு தொடர்பாக 153 வழக்குகள் பதிவு

11 ஜூன் 2026, 8:31 AM
‘ஓப்ஸ் திரிஸ் 4.0’ நடவடிக்கை: மானிய விலையிலான பெட்ரோல் முறைகேடு தொடர்பாக 153 வழக்குகள் பதிவு

ஷா ஆலம், ஜூன் 11: மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நாடு தழுவிய அளவில் மேற்கொண்டு வரும் ‘ஓப்ஸ் திரிஸ் 4.0’ (Op Tiris 4.0) அமலாக்க நடவடிக்கையின் கீழ், உள்ளூர் மானிய விலை பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்திய மற்றும் கடத்தியது தொடர்பாக மொத்தம் 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனைகளின் மூலம் நாடு முழுவதும் 68,692 லிட்டர் எரிபொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (New Straits Times) நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த மார்ச் 16 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், நாட்டின் பல மாநிலங்களில், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டும் நாடு தழுவிய அளவில் சுமார் 59,965 நெரிசலான இடங்களில் தீவிரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இது குறித்துப் பேசிய டத்தோ அஸ்மான் ஆடம், அரசாங்கம் வழங்கும் மானியங்கள் கசிவதைத் தடுப்பதிலும், பெட்ரோல் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை எல்லை தாண்டி கடத்துபவர்களுக்கு எதிராகப் போராடுவதிலும் தங்களது அமைச்சு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.

தங்களின் முதன்மை நோக்கம் அரசாங்கத்தின் மானிய விலை எரிபொருள் விநியோகம், உண்மையாகவே அதைப் பெறத் தகுதியுடைய இலக்குத் தரப்பினரைச் சென்றடைவதை உறுதி செய்வதே ஆகும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த அமலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, மானிய விலையிலான எரிபொருளைச் சட்டவிரோதமாக வாங்குதல், பதுக்கி வைத்தல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களைக் கண்டறிய பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அஸ்மான் கூட்டினார்.

அதோடு, எரிபொருள் கடத்தலில் ஈடுபடும் மாஃபியா கும்பல்களின் சதித்திட்டங்களைக் கண்டறிந்து முறியடிப்பதற்காகப், புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் முயற்சிகளையும் தங்களது அமைச்சு தற்போது பலப்படுத்தியுள்ளதாக அவர் விவரித்தார்.

இந்த ஒருங்கிணைந்த கூட்டு ஒத்துழைப்பின் மூலம், தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், மானியக் கசிவைத் தடுக்கவும், எரிபொருள் கடத்தல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டத்தோ அஸ்மான் ஆடம் எச்சரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.