கேபிள் திருட்டு: ஐந்து பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாகத் தேடும் காவல்துறை

9 ஜூன் 2026, 9:55 AM
கேபிள் திருட்டு: ஐந்து பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாகத் தேடும் காவல்துறை

கோலாலம்பூர், ஜூன் 9: மலேசியத் தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகோம் மலேசியாவிற்குச் (TM) சொந்தமான நிலத்தடி கேபிள்களை சொகுசு கார்களைப் பயன்படுத்தி திருடிச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TTDI) பகுதியில் இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறை தலைமை அதிகாரி ஏசிபி ஹூ சாங் ஹூக் விடுத்துள்ள அறிக்கையில், முதற்கட்ட விசாரணையின்படி இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் டிடிடிஐ, ஜாலான் டத்தோ சுலைமானில் நிகழ்ந்துள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு அருகே நில அளவை (Topography) பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், பொதுப் பயன்பாட்டு ஆழ்துளையிலிருந்து ஐந்து ஆண்கள் பிஎம்டபிள்யூ (BMW) ரக கார் ஒன்றின் உதவியுடன் கேபிள்களை வெளியே இழுப்பதை நேரில் கண்டுள்ளார்.

உடனடியாக அந்தச் சாட்சி அவர்களை நோக்கிச் சத்தமிட்டுத் தடுத்தபோது, அச்சந்தேக நபர்கள் அங்கிருந்து இரண்டு வெள்ளை நிற மற்றும் ஒரு கருப்பு நிற பிஎம்டபிள்யூ உட்பட மொத்தம் மூன்று சொகுசு கார்களில் ஏறித் தப்பியோடியுள்ளனர் என்று அவர் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்புக் கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்ததில், ஐந்து சந்தேக நபர்களும் சொகுசு வாகனங்களும் இத்திருட்டில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த டெலிகோம் மலேசியா அதிகாரிகள், இத்திருட்டினால் தங்களுக்கு ஏறத்தாழ 20,000 ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போது இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு, குற்றவியல் சட்டப்பிரிவு 379-இன் கீழ் திருட்டுக் குற்றத்திற்காகவும், 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகம் சட்டப்பிரிவு 235-இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்த பொதுமக்கள், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை (IPD Brickfields) தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.