தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் பறவைகள் தொல்லை; தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்

9 ஜூன் 2026, 3:31 AM
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் பறவைகள் தொல்லை; தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்

ஷா ஆலம், ஜூன் 9 – கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை (HTAR) வளாகத்தில் ஏற்பட்டுள்ள பறவைகளின் தொல்லைக்குத் தீர்வு காண்பதற்காக, மரங்களின் கிளைகளை வெட்டுதல் மற்றும் உள்ளூராட்சி மன்றத்துடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல தீவிரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள அடர்ந்த மரங்கள் அனைத்தும் புறாக்கள் மற்றும் காகங்களின் வாழ்விடமாக மாறியுள்ளதால், இந்தப் பறவைகள் மருத்துவமனைக் கட்டிடங்களுக்குள் பறந்து செல்லும் அபாயம் அதிகரித்துள்ளதாக HTAR நிர்வாகம் விளக்கியுள்ளது.

"இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ஒப்பந்த நிறுவனத்தின் (concessionaire) உதவியுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் மரங்களின் கிளைகளைக் கத்தரித்தல் மற்றும் வார்டு பகுதிகள், மருத்துவமனைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அவ்வப்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை HTAR செயல்படுத்தி வருகிறது.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் பறவைகளால் ஏற்படும் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, உள்ளூராட்சி மன்றத்துடன் நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம்," என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தை தாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும்; நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை வளாகத்தைப் பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும், வசதியானதாகவும் வைத்திருப்பதில் தங்களுக்கு முழு அர்ப்பணிப்பு உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழும் அபாயத்தைக் குறைப்பதற்காக, அவ்வப்போது தகுந்த மற்றும் பொருத்தமான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் HTAR கூறியுள்ளது.

முன்னதாக, HTAR மருத்துவமனையின் வார்டு ஒன்றிற்குள் பல புறாக்கள் புகுந்து சுற்றித் திரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, சுகாதார வசதிகளின் தூய்மை மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்த பரவலான விவாதங்களை தூண்டியது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.