கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு; கிள்ளான் & காப்பார் எம்பிக்கள் கவலை

12 பிப்ரவரி 2026, 8:33 AM
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு; கிள்ளான் & காப்பார் எம்பிக்கள் கவலை

கிள்ளான், பிப் 12- கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) மருத்துவத் துறையில் நிலவி வரும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் "ஆபத்தான பணிச்சூழல்" குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் மற்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹலிமா அலி ஆகியோர் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழல், ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக 'CodeBlue' சுகாதார இணையதளம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மாண்புமிகு கணபதிராவ் இது குறித்துக் கூறுகையில், 2022-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் தாம் தொடர்ந்து இந்த விவகாரத்தை எழுப்பி வருவதாகவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறை சேவையைப் பெரிதும் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், போதிய பணியாளர்கள் இல்லாதது மட்டுமின்றி, இடமாற்றம் மற்றும் ராஜினாமாக்கள் காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அங்குள்ள 13 வார்டுகளில் ஒவ்வொன்றும் சுமார் 60 நோயாளிகளைக் கையாளுவதாகவும், ஆனால் அவர்களைக் கவனிக்க மிகக் குறைவான அதிகாரிகளே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விகிதாச்சாரம் பாதுகாப்பான மருத்துவ தரநிலைகளை மீறுவதோடு, தவறான சிகிச்சை அல்லது கவனக்குறைவு ஏற்படவும் வழிவகுக்கும் என்று டாக்டர் ஹலிமா அலி எச்சரித்துள்ளார்.

மேலும், மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையினால், அங்குள்ள மருத்துவர்கள் மாதத்திற்கு 6 முதல் 7 முறை இரவு நேர அவசரப் பணிகளை (on-call) மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முறையான உதவியாளர்கள் இன்றி, ரத்தம் எடுப்பது முதல் ஆவணப் பணிகள் வரை அனைத்தையும் ஒரு மருத்துவ அதிகாரி மட்டுமே கவனிக்க வேண்டியுள்ளதால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது கட்டுமானத்தில் உள்ள காப்பார் மருத்துவமனை திறக்கப்பட்டால் இப்பிரச்சனை தீர்ந்துவிடும் என அரசாங்கம் கூறுவதை இவ்விரு உறுப்பினர்களும் மறுத்துள்ளனர்.

புதிய கட்டிடம் மட்டும் தீர்வாகாது என்றும், முறையான மனிதவளத் திட்டமிடல் மற்றும் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்காதவரை எச்.டி.ஏ.ஆர் மருத்துவமனையின் பாரம் குறையாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

முடிவாக, சுகாதார அமைச்சு இந்த விவகாரத்தில் வெறும் "பரிசீலனை செய்கிறோம்" என்ற வழக்கமான பதிலைக் கூறாமல், உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோயாளிகளின் உயிருடன் விளையாடாமல், மருத்துவர்களின் பணிச்சுமையைச் சீரமைக்க அரசாங்கம் ஒரு விரிவான வரைபடத்தை (Blueprint) உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என டாக்டர் ஹலிமா வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.