சைபர்ஜெயா, ஜூன் 9 – பொதுமக்கள் தங்களின் மதிப்பீட்டு வரி (assessment tax), நில வரி (land tax) மற்றும் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் (parking payments) போன்ற பல்வேறு பொதுச் சேவைகளை மிக எளிதாக அணுகும் பொருட்டு, தற்போதைய டிஜிட்டல் தளங்களை ஒன்றிணைத்து 'NINE' என்ற செயலி திட்டத்தைச் செயல்படுத்தச் சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உட்படப் பல நிறுவனங்கள் வெவ்வேறு செயல்பாடுகளுக்காகப் பல செயலிகளை இயக்குவதால், தற்போதைய காலகட்டத்தில் கைப்பேசி செயலிகள் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகிவிட்டன என்றார்.
இருப்பினும், இவ்வாறு எண்ணற்ற செயலிகள் பெருகுவது பயனர்களிடையே பெரும்பாலும் குழப்பத்தை ஏற்படுத்துதால், மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த அண்மையப் பேட்டியில் அவர் கூறுகையில், "சிலாங்கூர் மாநில அளவில், தனித்தனி உள்ளூர் ஊராட்சி மன்றங்களால் (PBT) உருவாக்கப்பட்ட அமைப்புகள் உட்படப் பல்வேறு பயன்பாடுகள் தற்போது புழக்கத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எனவே, இந்த செயலிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, படிப்படியாக அவற்றை ஒன்றிணைக்க நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், இந்த செயல்முறைக்கு ஒரு இடைமாற்றுக் காலம் (transition period) தேவைப்படும்; இதனை மிகக் குறுகிய காலத்திற்குள் விரிவாகச் செயல்படுத்திவிட முடியாது," என்றார்.
இந்த ஒருங்கிணைப்பு செயல்முறை நிறைவடைந்தவுடன், 'NINE' செயலியை ஒரு முழுமையாக மேம்படுத்துவதே மாநில அரசின் இலக்காகும் என்று இங் ஸீ ஹான் மேலும் தெரிவித்தார். இத்தளம் பல்வேறு அரசு முகமைகளின் கட்டணச் சேவைகளை ஒன்றிணைப்பது மட்டுமன்றி, மாநில அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை எளிதாக அணுகுவதற்கும் வழிவகை செய்யும்.
"பல்வேறு நலத்திட்டங்களை நிலைகளின் அடிப்படையில் டிஜிட்டல் மயமாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உதவிகளும் சலுகைகளும் இந்த 'NINE' தளத்தின் வழியாகவே விநியோகிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
'NINE' செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது பயனர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருவதோடு, பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்பத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். இருப்பினும், இதன் முழுமையான வளர்ச்சி எப்போது நிறைவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
எதிர்காலத்தில் 'செலாங்கா' (SELangkah) மற்றும் 'ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங்' (Smart Selangor Parking) உள்ளிட்ட பல தற்போதைய செயலிகள் 'NINE' உடன் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இங் ஸீ ஹான் குறிப்பிட்டார்.
கூடுதலாக, 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்து மானியம் (public transport subsidy) உள்ளிட்ட புதிய முயற்சிகளும் மாநில அரசின் நல உதவிகளும் இந்தச் செயலியின் மூலமாகவே வழிநடத்தப்பட்டு நிர்வகிக்கப்படும்.
முன்னதாக, சிலாங்கூர் மீள்திறன் மேம்பாட்டுத் தொகுப்பின் (Selangor Resilience Enhancement Package) கீழுள்ள பொதுப் போக்குவரத்து மானியத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் திறந்துவிடப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகம் அறிவித்திருந்தது.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய சிலாங்கூர்வாசிகள் ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 30 ரிங்கிட் போக்குவரத்து மானியத்திற்கு இந்த 'NINE' செயலி வாயிலாகவே விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.







