RM1 பில்லியன் முதலீட்டை ஈர்க்கும் சிலாங்கூர் ஏரோ பார்க்

13 ஆகஸ்ட் 2026, 4:17 AM
RM1 பில்லியன் முதலீட்டை ஈர்க்கும் சிலாங்கூர் ஏரோ பார்க்
RM1 பில்லியன் முதலீட்டை ஈர்க்கும் சிலாங்கூர் ஏரோ பார்க்

ஷா ஆலம், ஆகஸ்ட் 13 : சிலாங்கூர் ஏரோ பார்க் @கேஎல்ஐஏ ஏரோபோலிஸ் ( Aero Park @KLIA Aeropolis ) திட்டத்தின் முதலீட்டு மதிப்பு, வரும் 2027-ஆம் ஆண்டில் 1 பில்லியன் ரிங்கிட்டை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளித் துறையின் அசுர வளர்ச்சி மற்றும் உள்ளூர் - அனைத்துலக நிறுவனங்கள் அப்பகுதி மேம்பாட்டில் காட்டியிருக்கும் ஆர்வம் ஆகியவை அந்த முதலீட்டுக்கு வித்திடுமென மாநில முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில், இந்த 1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு இலக்கை 2027-க்குள் எளிதாக அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஏரோ பார்க் திட்டம் விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (MRO), உற்பத்தி, தளவாடங்கள், விமான சரக்கு, மற்றும் ஆராய்ச்சி & மேம்பாடு (R&D) போன்ற பல்வேறு விண்வெளித் துறை சார்ந்த பிரிவுகளில் முதலீட்டாளர்களைப் பெருமளவில் ஈர்த்து வருகிறது.

திட்டத்தின் தற்போதைய கட்டுமான நிலவரம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஜூலை 20 ஆம் தேதி வரையிலான கணக்கீட்டின்படி, முதற்கட்டத்தின் கீழ் உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிற்கான நிலம் சார்ந்த வேலைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும், அதன் உட்கட்டமைப்பு பணிகள் 48 விழுக்காட்டை எட்டியுள்ளன என்றும் கூறினார்.

இந்த 200 ஏக்கர் பரப்பளவிற்கான முழுமையான உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் வரும் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலப்பரப்பில், 100 ஏக்கர் நிலம் விமான இயந்திர பராமரிப்பு வசதிக்காக 'GE ஏரோஸ்பேஸ்' நிறுவனத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பை மற்ற விண்வெளித் துறை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான வணிக மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த எஞ்சியப் பகுதியில் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களை உருவாக்குவதற்கான திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், மெந்திரி பெசார் சிலாங்கூர் அல்லது எம்பிஐ (MBI) நிறுவனம், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்துடன் இணைந்து, இப்பகுதியில் செயல்பட ஆர்வமுள்ள நிறுவனங்களுடன் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

விண்வெளித் துறையானது கடுமையான தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டிருப்பதால், ஒரு முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதிச் செய்ய பொதுவாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை எடுக்கும் என்று இங் ஸீ ஹான் குறிப்பிட்டார்.

இறுதியாக, இந்த பிரம்மாண்ட முதலீடானது உள்நாட்டினருக்குப் பல உயர் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மலேசியாவை இவ்வட்டாரத்தின் முதன்மை விண்வெளி மையமாக வலுப்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.