ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 : சிலாங்கூரில் பதிவுச் செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட குத்தகை நிறுவனங்கள், நான்கு மாநிலங்களில், கிழக்குக் கடற்கரை இரயில் பாதை (ECRL) திட்டத்திற்கான குத்தகைகளைப் பெற்றுள்ளன.
அந்த குத்தகையின் மதிப்பு 3.58 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
அந்தத் தொகையில், சிலாங்கூரில் மட்டும் செயல்படுத்தப்படும் ECRL திட்டத்தின் மதிப்பு சுமார் 1.18 பில்லியன் ரிங்கிட் என்று போக்குவரத்து, மொபிலிட்டி துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
அந்த சாதனை, ECRL போன்ற பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளூர் தொழில்துறைக்கும் நிறுவனங்களுக்கும் பொருளாதார நன்மைகளை வழங்கியுள்ளதை நிரூபித்துள்ளதாக , இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பதிலளிக்கும் போது இங் ஸீ ஹான் கூறினார்.
"இதுவரை உள்ளூர் குத்தகையாளர்கள் பொதுப் பணி, கட்டுமானப் பொருள் விநியோகம், தொழில்முறை சேவைகள் ஆதரவுப் பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இது பெரிய அளவிலான திட்டங்களில் போட்டியிடுவதற்கும் இரயில் துறை விநியோகச் சங்கிலியில் பங்கேற்பதற்குமான உள்ளூர் நிறுவனங்களின் திறனையும் காட்டுகிறது," என்று இங் ஸீ ஹான் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளூர் தொழில்துறையின் திறனை மேம்படுத்த உதவுவது மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி ECRL பாதையில் உள்ள மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது என்றாரவர்.
அதே வேளையில், ECRL திட்டம் செயல்பாட்டு கட்டத்திற்குள் நுழையும் போது உள்ளூர் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
செயல்பாட்டுக் கட்டத்தின் போது புதிய வாய்ப்புகளை வழங்கக்கூடிய சாத்தியமான துறைகளில் பராமரிப்பு, வசதி நிர்வகிப்பு, ஆதரவு சேவைகள் மற்றும் நிலையங்களில் உள்ள வணிக இடங்களை நிரப்புதல் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.









