பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியா உறுதுணையாக இருக்கும்- பிரதமர் அன்வார்

8 ஜூன் 2026, 8:05 AM
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியா உறுதுணையாக இருக்கும்- பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 8 – பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் மலேசியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், தேவைப்படும் எந்தவொரு உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த இயற்கை பேரிடர் குறித்துத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்திய அவர், இதனால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் மக்களுக்காக மலேசியர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்களது பிரார்த்தனைகள் பிலிப்பைன்ஸ் மக்களுடன் இருக்கின்றன. அங்கு தேவைப்படும் எந்தவொரு வடிவத்திலான உதவிகளையும் வழங்குவதற்கு மலேசியா எப்போதும் தயாராகவே உள்ளது," என்று பிரதமர் அன்வார் கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மலேசியாவிலும் உணரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குறிப்பாகச் சபா மாநிலத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டினார்.

எனினும், மலேசிய அரசாங்கம் தற்போதைய ஒட்டுமொத்தச் சூழலையும் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நாட்டின் அவசரக்கால மீட்புப் படை சேவைகள் முழுமையான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவர் மலேசிய மக்களுக்கு உறுதியளித்தார்.

"மலேசியாவும் பிலிப்பைன்ஸும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் ஆசியான் (ASEAN) அமைப்பின் முக்கியப் பங்காளிகள் ஆவர். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எதிர்வரவிருக்கும் இக்கட்டான நாட்களை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையான மன வலிமையும் தைரியமும் கிடைக்கட்டும்," என்று அன்வார் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7.37 மணியளவில் பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில், பூமிக்கு அடியில் 50 கிலோமீட்டர் ஆழத்தில் 7.9 ரிக்டர் அளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வட அட்சரேகை 5.7 பாகையிலும், கிழக்கு தீர்க்கரேகை 125.1 பாகையிலும் இதன் மையப்புள்ளி பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட வேளையில், இன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சபாவின் தாவாவ், செம்பூர்ணா, குனாக் மற்றும் லாஹாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளில் சுமார் 0.4 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.