கோலாலம்பூர், ஜூன் 8 – பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபாவின் தாவாவ், செம்பூர்ணா, குனாக் மற்றும் லாஹாட் டத்தோ ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு இன்று காலை விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தற்போது அதிகாரப்பூர்வமாக மீட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவில், "இன்று (8 ஜூன் 2026) காலை 8.36 மணியளவில் வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிப்பு, இன்று நண்பகல் 12.00 மணியுடன் முழுமையாக மீட்டுக் கொள்ளப்பட்டு, அதன் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் பதிவான 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக, சபாவின் மேற்கூறிய நான்கு மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 0.4 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
தற்போது கடலில் ஆபத்தான சூழல் நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை தொடர்பாக ஏதேனும் அவசர மாற்றங்கள் ஏற்பட்டால் தவிர, தங்களின் தரப்பிலிருந்து வெளியிடப்படும் இறுதி அறிக்கை இதுவே என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.







