பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஐவர் உயிரிழப்பு, கட்டிடங்கள் சேதம்

8 ஜூன் 2026, 6:58 AM
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஐவர் உயிரிழப்பு, கட்டிடங்கள் சேதம்

மணிலா, ஜூன் 8 – தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, இதுவரை குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சாண்டோஸ் நகரத்தின் பேரிடர் மேலாண்மைத் தலைவர் அக்ரிபினோ டசெரா இதனைத் தெரிவித்துள்ளார் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

இப்பேரிடரால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களின் துல்லியமான விவரங்களை அதிகாரிகள் இன்னும் தீவிரமாகச் சரிபார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனத்தின் (Phivolcs) தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7.37 மணியளவில், பூமிக்கு அடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மிண்டனாவோ தீவில் உள்ள சரங்கானி மாகாணம், மாசிம் நகரக் கடற்கரையிலிருந்து தென்மேற்கே 32 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது. இது சுமார் 700,000 மக்கள் தொகையைக் கொண்ட ஜெனரல் சாண்டோஸ் நகரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலில் அதிகபட்சமாக 1.4 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் எழும்பியது பதிவாகியுள்ளது. நில அதிர்வுளால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதன் பலத்த அதிர்வுகள் அண்டை மாகாணங்கள் முழுவதிலும் உணரப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் அவசரப் பேரிடர் மீட்புப் பணிகளையும் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கடலோரப் பகுதி மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பசிபிக் பெருங்கடலின் "நெருப்பு வளையம்" (Ring of Fire) என்று அழைக்கப்படும் நிலநடுக்கப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாடு அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி இத்தகைய கடுமையான நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.