புத்ராஜெயா, ஜூன் 8 – மலேசியாவின் கூட்டரசு அரசியலமைப்பின் கோட்பாடுகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்ப, எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் அரசாங்கத்தில் இணைவதற்கும் பங்கேற்பதற்குமான உரிமை மறுக்கப்படக் கூடாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் நிர்வாகமானது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், பொதுமக்களின் உண்மையான விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
அதற்கு, உருவாக்கப்படும் அரசாங்கமானது பல்வேறு இனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குப் போதிய இடமளித்து, மலேசியாவின் பல்லின சமூக யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அவர் விவரித்தார்.
தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திரப் பேரவைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரதமர், "அரசாங்கத்தில் அல்லது ஓர் அமைச்சில் இருக்கும் நாம், நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மதப் பிரிவினரையும் பிரதிநிதிப்பவர்களாக விளங்க வேண்டும்.
அரசாங்கத்தின் முதன்மைப் பெரும்பான்மையாக மலாய்க்காரர்கள் இருந்தபோதிலும், நமது தெளிவான அடிப்படைக் கொள்கைகள் குறித்து எந்தவொரு விவாதமும் இல்லை. இரண்டாவதாக, நமது ஜனநாயக நடைமுறை அமைப்பில் நாம் மக்களை மதிக்கக் பழக வேண்டும்.
எனவே, எந்தவொரு இனம் அல்லது கட்சி, அரசாங்கக் கூட்டணியில் இணைவதையும் ஒன்றிணைந்து செயல்படுவதையும் மறுக்கும் வகையில் நாம் முடிவெடுப்பது என்பது மிகவும் அகங்காரமான செயலாகும். அரசியல் பிரச்சாரங்களின் தீவிரத்திற்கு மத்தியில் சில சமயங்களில் எல்லையைத் தாண்டிய பேச்சுக்கள் எழுவதால் தான் நான் இதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய எல்லையைத் தாண்டிய தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்; ஏனெனில், இது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு சேர்க்காது," என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், அவரது துணை அமைச்சர் தியோ நி சிங், அரசாங்கத் தலைமைச் செயலாளர் (KSN) டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அரசியல் வேறுபாடுகளைக் காரணம் காட்டி, நாட்டின் பல்லின சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் வகையிலான இனவாத உணர்வுகளையோ அல்லது தேவையற்ற வதந்திகளையோ யாரும் தூண்டிவிடக் கூடாது என்று பிரதமர் எச்சரித்தார்.
அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருப்பது ஜனநாயக அமைப்பில் இயல்பான ஒன்றுதான் என்று குறிப்பிட்ட அவர், எனினும் அந்த வேறுபாடுகள் மனிதநேயம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் பக்குவமான முறையில் கையாளப்பட வேண்டும் என்றார்.
"நமக்கு என்று சொந்தக் கொள்கைகளும் உணர்வுகளும் இருக்கலாம், நாம் வெவ்வேறு பின்னணியில் வளர்ந்திருக்கலாம். ஆனால், அது ஒருபோதும் சக மனிதர்களை மதிக்காத மனிதாபிமானமற்ற அணுகுமுறையாக மாறிவிடக் கூடாது. நாம் மலாய்க்காரராகவோ, சீனராகவோ அல்லது இந்தியராகவோ பிறப்பதை நாமாகத் தேர்ந்தெடுப்பதில்லை.
குறிப்பிட்ட தோற்றம் அல்லது தோலின் நிறத்தைக் கொண்ட ஒருவருடன் நாம் வேறுபட்டு நிற்பதை நாம் தீர்மானிப்பதில்லை. அதனால்தான், இஸ்லாமியக் கோட்பாடுகளிலும் கூட, இந்த பன்முகத்தன்மையை மதிப்பதே ஒரு மிக முக்கியப் பிரதான விதியாக்கப்பட்டுள்ளது," என்று அன்வார் கூறினார்.
மேலும், நாட்டில் தலைமைகள் மாறினாலும், கூட்டரசு அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட முதன்மைக் கொள்கைகளின் மீதே மலேசியா கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் மீண்டும் உறுதியுடன் தெரிவித்தார்.
"நமது நாடு சில மிக முக்கியக் கொள்கைகளின் மீதுதான் நிறுவப்பட்டுள்ளது. தலைவர்கள் மாறலாம்; ஆனால் கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பே என்றும் நமது நாட்டின் முதன்மை வழிகாட்டியாக இருக்கும்," என்று பிரதமர் அன்வார் கூறினார்.







