கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - நாட்டின் பொதுச்சேவை சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திலும், இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தோ அல்லது மாற்று இடங்களிலிருந்தோ பணிபுரிய அனுமதிக்கும் ஹைப்ரிட் வேலை முறை (HBH) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த காலங்களைப் போல வாரத்திற்கு ஐந்து நாட்களும் கட்டாயம் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரியும் பாரம்பரிய முறைக்கு விடை கொடுத்துவிட்டு, நவீன பணி முறைக்கு அரசுத்துறை தற்போது மாறியுள்ளது.
உலகளாவிய மாற்றங்களையும் நவீன வேலை முறைகளின் பரிணாம வளர்ச்சியையும் எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் எந்தவிதத்திலும் குறையாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த முன்னோடித் திட்டம் காலத்திற்கேற்றவாறு கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுச்சேவைத்துறை (JPA) தெரிவித்துள்ளது.
புதிய ஹைப்ரிட் வேலை முறைக்கான வழிகாட்டுதல்களின்படி, ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறையாகக் கொண்ட மாநிலங்களுக்கு, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அலுவலகத்திற்கு கட்டாயம் வர வேண்டிய நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதேசமயத்தில், ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறை நாளாகக் கொண்டுள்ள கெடா, கிளந்தான் மற்றும் திராங்கனு ஆகிய மாநிலங்களில், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் அலுவலகக் கட்டாய நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நாட்களுடன் சேர்த்து, மூன்றாவது அலுவலக வருகை நாளுக்கான தேதியை சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள் தங்களது அலுவலகச் செயல்பாடுகளுக்கு ஏற்ப தீர்மானிப்பார்கள்.
இந்த நவீன வேலை முறையானது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட உலகின் பல முன்னணி வளர்ந்த நாடுகளிலும் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஹைப்ரிட் வேலைத் திட்டத்தின் மூலம், தகுதியுள்ள அதிகாரிகள் இனி தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது சிறப்பு உத்தரவுகளுக்காகக் காத்திருக்கவோ தேவையில்லை. துறைத் தலைவர்களால் நிர்ணயிக்கப்படும் தகுதிகளுக்கு உட்பட்டு, இந்த விதிமுறை இப்போது நிரந்தரமான வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
அதேவேளையில், துறைத் தலைவர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சேவை நலன் கருதி தேவைப்படும் பட்சத்தில், வீட்டிலிருந்து பணிபுரியும் நாட்களில் ஊழியர்களை அலுவலகத்திற்கு நேரில் வருமாறு உத்தரவிடவோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மீறப்பட்டால் அந்தச் சலுகையை ரத்து செய்யவோ துறைத் தலைவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
எனினும், பொதுமக்கள் சேவை மையப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், தற்காப்புப் பிரிவினர், அமலாக்கத்துறையினர், கல்வித்துறை, சுகாதாரத் துறை மற்றும் நீதிமன்றங்கள் போன்ற சேவைத் துறைகளுக்கு இந்த ஹைப்ரிட் வேலை முறை பொருந்தாது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஊழியர்களின் உற்பத்தித் திறனையும் பணி வெளியீடுகளையும் முழுமையாக உறுதி செய்யும் வகையில், 'ஸ்பாட்-மீ' (SPOT-Me) எனும் பிரத்தியேக அமைப்பு மூலம் அதிகாரிகளின் வருகையும் பணியும் கண்காணிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, ஊழியர்கள் 1972ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்ட விதிகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்பதோடு, எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளக் கூடிய வகையிலும், எப்போது அழைக்கப்பட்டாலும் உடனடியாக அலுவலகத்திற்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் மீதான நம்பிக்கை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முழுமையான ஆதரவையும் கொண்டு இந்த ஹைப்ரிட் வேலை முறை செயல்படுத்தப்படுவதாகப் பொதுச்சேவைத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் சேவைகள் எப்போதும் சிறந்த தரத்துடன் தடையின்றி தொடர்வது உறுதி செய்யப்படும்.







