அரசின் 'டாயா கெர்ஜெயா 2.0' திட்டத்தில் 9 மில்லியன் ரிங்கிட் போலி கோரிக்கை மோசடி

8 ஜூன் 2026, 5:03 AM
அரசின் 'டாயா கெர்ஜெயா 2.0' திட்டத்தில் 9 மில்லியன் ரிங்கிட் போலி கோரிக்கை மோசடி

கோலா திரங்கானு, ஜூன் 7 – அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட 'டாயா கெர்ஜெயா 2.0' (Daya Kerjaya 2.0) வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தில், சுமார் 9.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி கோரிக்கைகள் (false claims) சமர்ப்பிக்கப்பட்டு நிதி முறைகேடு நடந்துள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இது குறித்துப் பேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான், இந்த மோசடி தொடர்பாக அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு நடவடிக்கை (operation) தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் (SOCSO) கீழ் கடந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்த உன்னதத் திட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 143 நிறுவனங்களும் 320 தொழிலாளர்களும் இந்த நிதி துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையது தங்களின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்று திரங்கானு மாநில ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தபோது பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "'டாயா கெர்ஜெயா 2.0' திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் கைதிகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிமார்களுக்கு, அரசாங்கம் ஒரு தொழிலாளிக்கு மாதத்திற்கு 1,500 ரிங்கிட் வீதம் ஆறு மாத காலத்திற்கு ஊதிய ஊக்கத்தொகையை வழங்குகிறது.

ஆனால், எங்களின் உளவுப் பிரிவு சேகரித்த ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, இத்திட்ட அமலாக்கத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் எனப் பிரகடனப்படுத்திய நபர்கள், உண்மையில் அங்கு வேலை செய்யாத போலி நபர்கள் (non-existent employees) என்பது தெரியவந்துள்ளது," என்று விவரித்தார்.

மேலும், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறையைப் பூர்த்தி செய்யாத தொழிலாளர்களுக்கும் முழுமையான ஊக்கத்தொகை பெறப்பட்டுள்ளது என்றும், இந்த நிதியைப் பெறுவதற்காகப் போலி ஆவணங்கள் (forged documents) பயன்படுத்தப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, இதேபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 1,638 நிறுவனங்களை ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் சுமார் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், எனினும் அது இன்னும் ஆரம்பக்கட்ட விசாரணை மட்டத்திலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் பெர்கேசோவின் தலைமையகம் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆதாரங்களையும் தகவல்களையும் திரட்டுவதற்காக அந்தந்த மாநில பெர்கேசோ அலுவலகங்களுடன் இணைந்து தங்களின் அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவார்கள் என்றார்.

பொதுமக்களின் நல்வாழ்விற்காக ஒதுக்கப்படும் அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்வதையோ அல்லது அதன் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள பலவீனங்களையோ ஆணையம் மிகக் கடுமையான விஷயமாகக் கருதுகிறது என்று அவர் எச்சரித்தார்.

அரசாங்கத்தின் பொது நிதி கசிவுகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, அரசாங்கத் துறைகள், முகமைகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தங்களின் 'நிர்வாகப் புலனாய்வுப் பிரிவு' (Governance Investigation division) கூடுதல் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

"அரசாங்க அமைப்பிலோ அல்லது விதிமுறைகளிலோ ஏதேனும் பலவீனங்கள் இருந்தால், அதை அடையாளம் கண்டு, அரசாங்கத்தின் திட்டங்கள் இன்னும் திறம்படச் செயல்பட்டு உரியப் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை நாங்கள் வழங்குவோம்.

மக்களுக்கு உதவ வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கொண்டுவரப்பட்ட ஓர் அரசாங்க ஊக்கத்தொகைத் திட்டம், பொறுப்பற்ற சில தரப்பினரால் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு இந்த 'டாயா கெர்ஜெயா 2.0' வழக்கே ஒரு சிறந்த உதாரணம்," என்று அப்துல் ஹலிம் வருத்தத்துடன் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், நாட்டின் இளைய தலைமுறையினரிடையே நேர்மைப் பண்பையும் ஊழல் எதிர்ப்பு விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில், இடைநிலைப்பள்ளிகளில் (Secondary Schools) 'ஊழல் எதிர்ப்புப் படைப்பிரிவு' (Anti-Corruption Cadets) எனும் மாணவர் அமைப்பை உருவாக்க ஊழல் தடுப்பு ஆணையம் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்.

இதன் தொடக்கமாக, புத்ராஜெயா அல்லது கோலாலம்பூரில் உள்ள ஒன்று அல்லது இரண்டு பள்ளிகளில், சுமார் 30 முதல் 40 மாணவர்களைக் கொண்டு இத்திட்டத்தைப் பரீட்சார்த்த முறையில் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

"நிச்சயமாக, இந்தத் திட்டம் குறித்து நாங்கள் முதலில் கல்வி அமைச்சுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்களின் சம்மதம், அதே போல் இதற்கான சீருடைகள் மற்றும் இதரத் தேவைகளுக்கான செலவினங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறி டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.