நிதியுதவி பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – பிரதமர்

7 ஜூன் 2026, 8:07 AM
நிதியுதவி பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – பிரதமர்

ஷா ஆலம், ஜூன் 7 – நாட்டின் ஏழை எளிய மக்கள் தங்களின் நிதியுதவிகளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் பழைய நடைமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அதற்கு மாற்றாக நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான விநியோக முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பழைய அணுகுமுறைகள் தற்போதைய நவீன கால வளர்ச்சிக்குப் பொருத்தமற்றதாக இருப்பதுடன், நிதியுதவி பெறும் பொதுமக்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பத்து பகாட்டில் நடைபெற்ற ஜோகூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் (PH) தேர்தல் இயந்திரத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், "நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த 2026ஆம் ஆண்டிலும், மக்கள் நிதியுதவிக்காக இன்னும் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது தேர்தல் அரசியல் சார்ந்த விஷயம் அல்ல; மாறாக, மக்களை நாம் ஒருபோதும் அடிமைகளாகக் கருதக்கூடாது என்பதற்கானது. நாம் இப்போது சுதந்திரமான, இறையாண்மை மிக்க ஒரு நாட்டில் வாழ்கிறோம். இங்குள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட மதிப்பும், உரிமையும், சுதந்திர உணர்வும் உண்டு," என்று மிகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தற்போதைய மலேசியா மடாணி (Malaysia MADANI) அரசாங்கமானது, மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் மிக விரைவாகவும், திறம்படவும், அதே வேளையில் அவர்களின் கண்ணியத்திற்குப் பங்கம் வராத வகையிலும் சென்றடைவதை உறுதி செய்ய முற்படுவதாக அன்வார் கூறினார்.

இதற்காகப், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக நிதியைச் செலுத்தும் நவீன முறைமையில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் விவரித்தார்.

இந்த புதிய அணுகுமுறையின் மூலம், பொதுமக்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்குச் நேரில் செல்ல வேண்டிய அவசியமோ அல்லது நீண்ட வரிசையில் தங்களின் நேர வீணடித்துக் காத்திருக்க வேண்டிய தேவையோ இனி எழாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் 'ரஹ்மா ரொக்க உதவித்தொகை' (STR) மற்றும் 'ஆரம்பப்பள்ளி நிதியுதவி' (BAP) உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இனி இத்தகைய நவீன முறைமையின் மூலமே விநியோகிக்கப்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

முன்னதாக, நாட்டின் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நடப்பாண்டில் STR மற்றும் 'ரஹ்மா அடிப்படை உதவித்தொகை' (SARA) ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த முன்முயற்சியின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 90 லட்சம் பொதுமக்கள் பெரும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், STR உதவித்தொகையானது தகுதியுள்ள குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் தனிமையில் வாழும் இளைஞர்கள் என அவர்களின் பின்னணிக்கு ஏற்ப, பல்வேறு கட்டங்களாக நான்கு நிலைகளில் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அதே வேளையில், சாரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது பயனாளிகளின் அடையாள அட்டையான 'மைகாட்' (MyKad) கணக்கில் நேரடியாகப் பதியப்படும். இதன் மூலம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மிக எளிதாக வாங்கிக் கொள்ள முடியும்.

மேலும், மாணவர்களுக்கான ஆரம்பப்பள்ளி நிதியுதவித் திட்டத்திற்காக அரசாங்கம் 800 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் கீழ், நாடு முழுவதும் உள்ள 52 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தலா 150 ரிங்கிட் நிதியுதவியைப் பெற்று பயனடைவார்கள் என்று பிரதமர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.