ஷா ஆலம், 15 ஜனவரி: விண்ணப்பதாரர்கள் தவறான அல்லது துல்லியமற்ற தகவல்களை வழங்கியது கண்டறியப்பட்டால், ரஹ்மா உதவித் தொகை (STR) உள்ளிட்ட எந்தவொரு உதவியையும் மீட்டுக் கொள்ளவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கத்திற்கு உரிமை உண்டு.
தகுதியுள்ளவர்கள் மட்டுமே இந்த உதவியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு STR விண்ணப்பமும் சம்பந்தப்பட்ட அரசு முகமைகளுடன் பல்வேறு சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் தகுதியை உறுதிப்படுத்த, வீடுகள், வாகனங்கள், வணிகங்களின் உரிமை மற்றும் வேலைவாய்ப்பு நிலை அல்லது வெளிநாடுகளில் தங்கியிருப்பது குறித்த அவ்வப்போதைய ஆய்வுகள் ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சு கூறியது.
"தவறான அல்லது துல்லியமற்ற தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். விதிமீறல்கள் நடந்தால், அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு உதவியையும் மீட்டுக் கொள்ளும் உரிமையும் அரசாங்கத்திற்கு உண்டு," என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் விடுபடும் அபாயத்தைக் குறைக்க, புதிய விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் ஆண்டு முழுவதும் https://bantuantunai.hasil.gov.my என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வாயிலாகத் திறந்திருக்கும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்தது. இதற்கிடையில் சாரா தொடர்பான தகவல்களை https://sara.gov.my என்ற அகப்பக்கத்தில் சரிபார்க்கலாம்.
2026-ஆம் ஆண்டிற்கான STR முதல் கட்ட உதவித்தொகை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தபடி, ஜனவரி 20 முதல் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, 3.7 மில்லியன் குடும்பங்கள் மற்றும் 1.3 மில்லியன் துணையில்லாத முதியவர்கள் பயன்பெறும் வகையில் 1.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதிக்கேற்ப விண்ணப்பதாரர்கள் 100 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரை பெறுவார்கள்.


