குவாந்தான், ஜூன் 5: 2024-ஆம் ஆண்டில் மொத்த விற்பனை உரிமமின்றி RM1.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 946,234 லிட்டர் மானிய விலை மீனவர் டீசலை வாங்கியதற்காக, கடல் உணவு மொத்த விற்பனை நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்கள் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 160 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆத்தோங் ஃபிஷிங் சென். பெர்ஹாட் (Atong Fishing Sdn Bhd) நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் மூன்று இயக்குநர்களான செங் சோக் தோங் (73), மற்றும் அவரது இரு மகன்களான செங் தீ யோங் (49), செங் தீ ஹவ் (46) ஆகியோர் நீதிபதி சஸ்லினா சாஃபி முன்னிலையில் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினர்.
அந்த நிறுவனமும், சம்பந்தப்பட்ட மூன்று இயக்குநர்களும் தனித்தனியாகத் தலா 40 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். மொத்த விற்பனை உரிமமின்றி RM17,620.35 முதல் RM72,540.60 வரையிலான மதிப்புடைய கட்டுப்பாட்டுப் பொருளான டீசல் எண்ணெயை வாங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயல் கடந்த 2024 ஜனவரி 15 முதல் அக்டோபர் 17 வரை கோலா ரொம்பினில் உள்ள ரொம்பின் பகுதி மீனவர் சங்கத்தில் (Persatuan Nelayan Kawasan Rompin) செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1974-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டு விதி முறைகளின் 3(1) துணை விதியின் கீழ் இக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 22(2) துணைப் பிரிவின் கீழ், முதல் குற்றத்திற்கு RM2 மில்லியன் வரையிலும், இரண்டாவது குற்றத்திற்கு அதிகபட்சமாக RM5 மில்லியன் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அரசுத் துணை வழக்கறிஞர்களான முகமட் சோபியான் சக்காரியா மற்றும் முனிரா சம்சுதீன் ஆகியோருடன், அரசு தரப்பு வழக்குரைஞர் நோர் அம்ரி முகமட் நவாவி வழக்கை வழிநடத்தினர். அதே வேளையில், குற்றம் சாட்டப்பட்ட மூவர் சார்பாக வழக்கறிஞர் அனசுஹா அத்திகா மாட் சாயிடி ஆஜரானார்.
நீதிமன்ற நடவடிக்கையின் போது, மீனவர்களுக்கான மானிய டீசல் முறைகேடு பொதுமக்களின் நலன் சார்ந்த பிரச்சினை என்பதாலும், அரசாங்கத்தால் தீவிரமாகக் கவனிக்கப்படும் விவகாரம் என்பதாலும் அதிக பிணைத் தொகையை விதிக்க அரசுத் தரப்பு பரிந்துரைத்தது.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான அனசுஹா அத்திகா, இரு வழக்குகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், தனது வாடிக்கையாளர்களுக்கு முந்தைய வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய பிணைத் தொகையை நீதிமன்றம் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் RM 45,000 பிணைத் தொகையை நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், முன்பு நீதிமன்றம் விதித்த நிபந்தனையான, ஒவ்வொரு மாதமும் பகாங் KPDN அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனை இன்றைய அனைத்து புதிய குற்றச்சாட்டுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறிய நீதிமன்றம், இவ்வழக்கின் மறுவாசிப்பு தேதியாக வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியை நிர்ணயித்தது.
கடந்த மே 13-ஆம் தேதி, இதே நிறுவனமும் அதன் மூன்று இயக்குநர்களும் உரிமமின்றி மீனவர்களுக்கு மானிய டீசலை வாங்குவதற்காகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக RM3.3 மில்லியன் மதிப்பிலான இரண்டு மில்லியன் லிட்டர் எரிபொருள் பதுக்கி வைப்பதற்காகவும் 164 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த விற்பனை உரிமமின்றி RM1.5 மில்லியனுக்கும் மேலாக டீசல் வாங்கியதாக ஒரு நிறுவனம் மற்றும் மூன்று இயக்குநர்கள் மீது 160 குற்றச்சாட்டுகள் பதிவு
5 ஜூன் 2026, 4:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மானியமில்லாத RON97, RON95, டீசல் விலை குறைப்பு
Bernama
1 அக்டோபர் 2026

national
லாரிகளின் டீசல் செலவைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் கார்ட் அறிமுகம்: KDEBWM
Sheeda Fathil
30 செப்டெம்பர் 2026

national
செப். 9 வரை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு
Bernama
3 செப்டெம்பர் 2026

national
BUDI95: மீண்டும் 300 லிட்டராகிறது எரிபொருள் ஒதுக்கீடு
Media Selangor Team
30 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



