கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த ஜூன் 3-ஆம் தேதி அதிகாலையில் குவைத் அனைத்துலக விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள நிலைமையை குவைத்தில் உள்ள மலேசியத் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ள அனைத்து மலேசியப் பிரஜைகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் தூதரகம் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் கொடூரத் தாக்குதலின் விளைவாக, குவைத் அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து வணிக ரீதியிலான விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் தங்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள மலேசியப் பயணிகள், மாற்றுப் பயண ஏற்பாடுகள் மற்றும் விமான மறுஅட்டவணை விபரங்களைப் பெற குறிப்பிட்ட விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதே வேளையில், குவைத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பிராந்தியங்களில் வசிக்கும் அல்லது அங்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியர்கள் அனைவரும் உச்சக்கட்ட விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்கும் பாதுகாப்பு நெறிமுறைகள், நடமாட்டக் கட்டுப்பாடுகள் அல்லது அவசரகால உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்றுமாறும் விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
இதுவரை தங்களின் வருகையைப் பதிவு செய்யாத மலேசியர்கள், அவசர காலங்களில் தொடர்புகொள்வதற்கும் விரைவான உதவிகளைப் பெறுவதற்கும் ஏதுவாக, அமைச்சின் ‘இ-கொன்சுலார்’ (e-Konsular) இணையப் பக்கத்தின் வாயிலாக உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவசர தூதரக உதவிகள் தேவைப்படும் மலேசியர்கள், குவைத்தில் உள்ள மலேசியத் தூதரகத்தை +965 2255 0394 அல்லது +965 2255 0395 ஆகிய எண்கள் வழி அல்லது +965 9678 3036 என்ற அவசரக் கால அழைப்பு எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், mwkuwait@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் அதிகாரிகளை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, தேவைக்கேற்பப் புதிய தகவல்களை உடனுக்குடன் வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







