ஷா ஆலம், ஜூன் 4 – கடந்த ஜூன் 2-ஆம் தேதியன்று சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் முறையே 2.9 ரிக்டர் அளவில் இரு வெவ்வேறு மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதன் பொது இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப், முதல் நிலநடுக்கம் சபா மாநிலத்தின் ரானாவ் பகுதியில் அன்றைய தினம் காலை 10 மணி 36 நிமிட அளவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிலநடுக்கமானது வடக்கு அட்சரேகை 6.07 பாகையிலும், கிழக்கு தீர்க்கரேகை 116.58 பாகையிலும் மையம்கொண்டிருந்தது என்றும், இதன் காரணமாக குண்டசாங், ரானாவ் மற்றும் கோத்தா பெலுட் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதே நாளில் இரவு 10 மணி 33 நிமிட அளவில், சரவாக் மாநிலத்தின் மாம்போங் பகுதியிலும் 2.9 ரிக்டர் அளவிலான மற்றொரு மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வடக்கு அட்சரேகை 1.32 பாகையிலும், கிழக்கு தீர்க்கரேகை 110.39 பாகையிலும் மையம் கொண்டிருந்ததாக டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சமரஹான் மற்றும் செரியான் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இந்தச் சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதோடு, அவ்வப்போது உடனுக்குடன் புதிய தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பதிவான இவ்விரு நிலநடுக்கங்களும் மிகக் குறைந்த மற்றும் மிதமான அளவிலேயே இருந்ததால், பொதுமக்கள் யாரும் இதுகுறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அண்மைக்கால வானிலை மற்றும் நிலநடுக்கம் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களை மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ‘myCuaca’ செயலி மற்றும் அதன் சமூக ஊடகப் பக்கங்களின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம் எனப் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







