பத்தாங் காலி–கெந்திங் சாலை விபத்து: பகாங் மூத்த காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்

3 ஜூன் 2026, 3:51 AM
பத்தாங் காலி–கெந்திங் சாலை விபத்து: பகாங் மூத்த காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்

ஷா ஆலம், ஜூன் 3: ஜாலான் பத்தாங் காலி-கெந்திங் (Jalan Batang Kali-Genting) சாலையில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியானவர் பகாங் மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் (IPK Pahang) விநியோகத் துறை (Logistics Department) தலைவராகப் பணியாற்றி வந்த 51 வயதுடைய சுப்பிரிண்டெண்டென்ட் யுஸ்லிமேசாம் ஹாஷிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலையில் ஏற்பட்ட மிகக் கடுமையான காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள உலு சிலாங்கூர் துணைக் காவல்துறை தலைவர் டெபுட்டி சுப்பிரிண்டெண்டென்ட் முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ், நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அதிகாரி, கெடா, அலோர் ஸ்டாரிலிருந்து பகாங் மாநிலக் காவல்துறை தலைமையகத்தை நோக்கித் தமது மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணம் மேற்கொண்டிந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

அவர் பத்தாங் காலி சாலையிலிருந்து கெந்திங் நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள ஓர் இடதுபுற வளைவில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசைப் பாதைக்குள் நுழைந்துள்ளது.

அப்போது, எதிரே 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் ஓட்டி வந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அந்த அதிகாரியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு முகத்திலும் நெஞ்சிலும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பு கூறியுள்ளது.

இவ்விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப்பிரிவு 41(1)-இன் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்த பொதுமக்கள், போக்குவரத்துப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மதி எம்.டி அபு @ ராம்லியை 03-60641222 என்ற எண்களிலோ அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.