புக்கிட் மெர்தாஜாம், மே 26: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்ற நிலை மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் எரிபொருள் இருப்பு மிகவும் சீராகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அத்துடன், மானிய விலையிலான ரோன்95 (RON95) பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற அளவிலேயே தொடர்ந்து தக்கவைப்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.
நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் பேசுகையில், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளுடன் மலேசியா கொண்டுள்ள சுமுகமான மற்றும் நல்லுறவானது, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான எண்ணெய் விநியோக ஓட்டத்தை எவ்விதத் தடங்கலும் இன்றி சீராகப் பெறுவதற்குப் பெரிதும் உதவியுள்ளது என்றார்.
"ஈரானுடன் நாம் கொண்டுள்ள நற்புறவு, குறைந்தபட்சம் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலாவது நாட்டின் எண்ணெய் விநியோகம் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய உதவியுள்ளது.
முன்னதாக காப்பீட்டுச் செலவுகள் மற்றும் கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்ததால், டீசல் விநியோகத்தில் சில சிறிய தடங்கல்கள் ஏற்பட்டு விலை சற்றே உயர்ந்திருந்தது. ஆனால், தற்போது டீசல் விநியோகமும் சீராக உள்ளது. எவ்வாறாயினும், ரோன்95 பெட்ரோல் விலை தொடர்ந்து 1.99 ரிங்கிட்டாகவே நீடிக்கும்," என்று விளக்கினார்.
உயர்ந்து வரும் டீசல் செலவினங்களைச் சமாளிக்க விவசாயிகள், மீனவர்கள், டிராக்டர் ஓட்டுநர்கள், பள்ளிப் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் போக்குவரத்துத் துறையினருக்கு உதவும் நோக்கில், அரசாங்கம் 'பூடி மடாணி ரோன்95' (BUDI95) உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து விவாதிப்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நேற்று மாலை 6 மணியளவில் தங்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளவுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
"அந்த நல்லுறவு நமக்கு மிகச் சிறந்த முறையில் உதவியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலிய சியோனிச ஆட்சி தாக்குதல் நடத்திய போது நாம் நமது அனுதாபத்தை வெளிப்படுத்தினோம். அதன் பின்னர், ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதில் நமது எண்ணெய் விநியோகக் கப்பல்கள் (Oil Tankers) சிரமங்களை எதிர்கொண்ட போது, அந்த நீரிணையைக் கடந்து பெங்கெராங் (Pengerang) வந்தடைவதற்கு முதன்முதலில் அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் ஒன்றாகத் திகழ்ந்தது," என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இறுதியாக, அண்டை நாடான பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவின் எரிபொருள் விநியோகம் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்காக நாடு எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேலும் கூறினார்.








