மூவார், ஜூன் 16 – நாட்டின் எரிசக்தி விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகப், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்யாவின் கசான் (Kazan) நகருக்கு இன்று முக்கிய அலுவல் பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
இப்பயணத்தின் போது அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் மிக முக்கியப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார்.
ஆசியான் (ASEAN) தலைவர்களுக்கும் ரஷ்யத் தலைமைத்துவத்திற்கும் இடையிலான சந்திப்பை உள்ளடக்கிய இப்பயணமானது, மலேசியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தின் தொடர்ச்சியையும் அதன் பாதுகாப்பையும் உறுதி செய்ய முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
நேற்று பந்தாய் லேக்கா உணவு மையத்தில் (Medan Selera Pantai Leka) மீனவர்கள், விவசாயிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் நடைபெற்ற தேநீர் விருந்து உபசரிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், "நான் அதிபர் புட்டினைச் சந்திக்கும் போது, ரஷ்யா நமக்குத் தொடர்ந்து தடையின்றி எண்ணெய் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவேன். மற்ற நாடுகளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவின் ரகசியமே இதுதான்," என்று குறிப்பிட்டார்.
அண்டை ஆசியான் நாடுகள் சிலவற்றில் எரிசக்தி விநியோக நெருக்கடி ஏற்பட்டு, சில எரிபொருள் நிலையங்களை மூடும் அளவிற்குச் சூழல் மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், மலேசியா அத்தகைய நெருக்கடிகளில் சிக்காமல் நீண்ட கால எரிசக்தி பாதுகாப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் மிக அவசியம் என்றார்.
சிறந்த பொருளாதார நிர்வாகம் மற்றும் வலுவான சர்வதேச உறவுகள் காரணமாகவே, மலேசியாவால் உள்நாட்டுச் சில்லறை எரிபொருள் விலையை, குறிப்பாக ரோன்95 (RON95) விலையை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற அளவில் தக்கவைக்க முடிந்துள்ளது என பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.
இருப்பினும், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தியத் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் குறித்தும், அதனால் ஹார்முஸ் நீரிணை (Selat Hormuz) மூடப்பட்டிருப்பது குறித்தும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
அந்த மூலோபாய கடல் வழித்தடத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வின் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
ஆயினும், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிடமிருந்து தமக்குக் கிடைத்துள்ள புதிய தகவலின்படி, இந்த ஆயுதமேந்திய மோதல்கள் மிக விரைவில் ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக அன்வார் கூறினார்.
"நேற்று பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து வந்த தகவலின்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இப்பிரச்சனை முடிவுக்கு வரலாம் எனத் தெரிகிறது.
அதற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். ஏனெனில், ஒருவேளை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் அதன் பாதிப்பு மலேசியா வரை நீண்டு, எண்ணெய் விலை உயரும். ஆனால், நல்லவேளையாக இன்று எண்ணெய் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது," என்று அவர் கூறினார்.







