மக்கள் நீதிக் கட்சியின் (கெ அடிலான்) இணைத் தேர்தல் இயக்குநராக நூருல் இஷாவிற்கு பதிலாக அமிருடின் நியமனம்; தேர்தல் வியூகங்கள் தீவிரம்

26 மே 2026, 9:07 AM
மக்கள் நீதிக் கட்சியின் (கெ அடிலான்) இணைத் தேர்தல் இயக்குநராக நூருல் இஷாவிற்கு பதிலாக அமிருடின் நியமனம்; தேர்தல் வியூகங்கள் தீவிரம்
மக்கள் நீதிக் கட்சியின் (கெ அடிலான்) இணைத் தேர்தல் இயக்குநராக நூருல் இஷாவிற்கு பதிலாக அமிருடின் நியமனம்; தேர்தல் வியூகங்கள் தீவிரம்

ஷா ஆலாம், மே 26: சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயிலுடன் இணைந்து, மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) துணைத் தலைவரான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இணைத் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சிலாங்கூர் மந்திரி புசாருமான அமிருடின், இதற்கு முன்பு இப்பதவியை வகித்த கட்சியின் மற்றொரு துணைத் தலைவரான நூருல் இஸ்ஸா அன்வாருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் தயார் நிலையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வியூக மறுசீரமைப்பு செய்யப் பட்டுள்ளதாக கெ அடிலான் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபூசியா சாலே இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அதேவேளையில், பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின், பிரதான தேர்தல் நடவடிக்கை அறையின் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு உதவியாக டத்தோ ரூஜி உபி செயல்படுவார். இவர்கள் தேர்தல் வியூகம், களப்பணிகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணியை மேற் கொள்வர்.

"அனைத்து மட்டங்களிலும் கெஅடிலானின் தேர்தல் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, விரிவான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான கட்சியின் வியூக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள் அமைந்துள்ளன.

"இது முன்னர் உருவாக்கப்பட்ட அடிப்படைப் பணிகளின் தொடர்ச்சியாகும். இதில் தேர்தல் கட்டமைப்பை வலுப் படுத்துதல், மாநிலங்கள் மற்றும் கிளைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, மற்றும் 'தெராஸ்' (TERAS) அமைப்பின் மூலம் களப்பணிகளில் தரவுகள் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்," என்று ஃபூசியா கூறினார்.

நூருல் இஸ்ஸாவின் புதிய பங்கு குறித்து விளக்கிய ஃபூசியா, கட்சியின் தேர்தல் இயந்திரத்தின் திறனை மேம்படுத்துவதிலும், கட்சியின் செயல்பாடுகளை மிகவும் வலுவான மற்றும் முறையான திசையில் கொண்டு செல்வதிலும் அவர் தொடர்ந்து முக்கிய வியூகப் பங்காற்றுவார் எனத் தெரிவித்தார்.

"இந்த மாற்றம் கட்சியின் ஒவ்வொரு அடிமட்ட உறுப்பினரின் மீதான முதலீட்டின் ஒரு பகுதியாகும். இதன்மூலம் கட்சியின் பலம் அனைத்து மட்டங்களிலும் விரிவாகவும் தொடர்ச்சியாகவும் கட்டமைக்கப்படும்.

"கட்சியின் பலம் மத்திய தலைமைத்துவத்திடம் மட்டுமின்றி, மக்களின் குரலுக்குச் செவி சாய்த்து தினமும் களத்தில் உழைக்கும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களிடமே உள்ளது என்பதை கெஅடிலான் முழுமையாக உணர்ந்துள்ளது," என்று அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதம் வரை கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,936-ஐ எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"இதே எழுச்சியுடன், கட்சியில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் கெஅடிலான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

"கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்துதல், அடிமட்டத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த தேர்தல் இயந்திரமும் கவனத்துடன், முறையாகச் செயல்படுவதை உறுதி செய்தல் ஆகிய இலக்குகளுடன், எதிர்வரும் தேர்தல் சவால்களை எதிர்கொள்ள கெஅடிலான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது," என்று ஃபூசியா மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.