புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு

26 மே 2026, 7:58 AM
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு

உலு சிலாங்கூர், மே 26: இங்குள்ள புக்கிட் சாங்காட் ஆசாவில் (Bukit Changkat Asa) மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வழித்தவறி மாயமானதாகக் கருதப்படும் நூர் இசாத்தி ஹுமைரா அசிசுல் (Nur Izzati Humaira Azizul) என்ற 19 வயது இளம் பெண், இன்று மீட்புக் குழுவினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் (SAR) ஈடுபட்டிருந்த அதிகாரிகள், இன்று காலை சுமார் 11.59 மணியளவில் அந்த இளம் பெண்ணின் உடலை மலையேற்றப் பாதைக்கு வெளியே கண்டெடுத்ததாகச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவ இடத்தில் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், அந்தப் பெண் கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், சம்பவ இடக் கட்டுப்பாட்டு மையத்தில் (PKTK) இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அப்பெண்ணின் உடலை மீட்புக் குழுவினர் கட்டுப்பாட்டு மையத்திற்குக் கொண்டு வருவதற்குச் சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாக அவர் விவரித்தார்.

தற்போது அந்த இளம் பெண்ணின் உடல் மலேசிய அரசப் காவல்துறையிடம் (PDRM) ஒப்படைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று மாலை 6.30 மணிக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தத் தேடுதல் நடவடிக்கை, இன்று நான்காவது நாளாகக் காலை 8 மணி முதல் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் பங்களிப்போடு மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்த நூர் இசாத்தி ஹுமைரா, கடந்த சனிக்கிழமை காலை 10.50 மணியளவில் தனது குடும்பத்தினருடன் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது மாயமானார்.

அப்போது தமக்கு அதிக வெப்பமாகவும் சோர்வாகவும் இருந்ததால், சீக்கிரம் கீழே சென்றடையும் நோக்கில் குடும்பத்தினரை விடுத்துத் தனியாக நடக்கத் தொடங்கிய போதே அவர் காட்டில் வழிதவறிச் சென்றுள்ளார் என்று நம்பப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.