கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

10 ஜூன் 2026, 2:10 AM
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

புத்ராஜெயா, ஜூன் 10 – கெந்திங் ஹைலேண்ட்ஸ் மலைப்பாதையில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கவும், சாலைப் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அப்பாதையில் கூடுதல் வேகத்தடைகள் (Bonggol Jalan) அமைக்கப்பட வேண்டும் என்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அந்த புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தின் முக்கிய நுழைவாயில் மற்றும் வெளியேறும் பாதைகள் போன்ற ஆபத்தான பகுதிகளில், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் கெந்திங் ஹைலேண்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்த சுற்றுலாப் பேருந்து விபத்து குறித்து, நிலப் பொதுப் போக்குவரத்து முகமை (APAD), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), அரச மலேசியக் காவல் துறை (PDRM), புஸ்பாகோம் (PUSPAKOM) மற்றும் தொடர்புடைய இதர முகமைகளுடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சாலைப் பாதுகாப்பு மேலாண்மைத் தரத்தை உயர்த்துவதற்காக, தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்து, அவற்றை விரைவாகச் செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, அந்த மலைப்பாதையில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை (Speed Traps) பொருத்த சாலைப் போக்குவரத்துத் துறை பரிந்துரைத்திருந்த போதிலும், அது ஒரு தனியார் சாலை என்பதால் அந்தப் பரிந்துரையை இதுவரை செயல்படுத்த முடியவில்லை என்று தியோங் கிங் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அது தனியாருக்குச் சொந்தமான சாலையாக இருந்தாலும், அங்கு பயணிப்பது பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் என்பதால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கெந்திங் ஹைலேண்ட்ஸ் நிர்வாகம் அரசாங்கத்துடனும் அமலாக்க முகமைகளுடனும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டின் சுற்றுலாத் துறையின் நற்பெயரைக் காப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒரே தவறு மீண்டும் மீண்டும் தொடர்வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது என்றும், இதற்காக கெந்திங் ஹைலேண்ட்ஸ் நிர்வாகத்துடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினார்.

மேலும், கடந்த மே 30ஆம் தேதி கெந்திங் ஹைலேண்ட்ஸ்-கெந்திங் செம்பா பாதையின் 15ஆவது கிலோமீட்டரில் இரு பேருந்துகள் மற்றும் ஒரு SUV வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து, சுற்றுலா வாகனங்களின் கட்டுப்பாடு, ஓட்டுநர்களின் பின்னணிப் பரிசோதனை மற்றும் சாலைப் பாதுகாப்பு அமலாக்கப் பொறிமுறையை வலுப்படுத்துவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாக அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.