கோம்பாக், மே 24: உலகளாவிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவின உயர்வுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ‘சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்பு’ (Selangor Resilience Enhancement Package) திட்டத்தின் கீழ் உள்ள பல முக்கியக் கூறுகள் அடுத்த மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படவுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சிலாங்கூர் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட இந்த ஊக்கத்தொகைத் தொகுப்புத் திட்டங்கள், எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளன.
இவை தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதோடு, தேவையுள்ள மக்களுக்குப் பெரும் நிவராணத்தையும் ஆதரவையும் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில், தகுதியுடைய எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யவும், இத்திட்டங்களை எவ்விதத் தடையுமின்றி மிகவும் சீராகவும் திறம்படவும் கொண்டு சேர்க்கவும் தேவையான இறுதி கட்ட அமலாக்கத் திட்டங்கள் மற்றும் அதன் கட்டமைப்பை வகுக்கும் பணிகளில் மாநில அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, நேற்று நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஹரிராயா ஹாஜி நோன்புப் பெருநாளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வின் போது அவர் விவரித்தார்.
எதிர்வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியின் விளைவாக, வாழ்க்கைச் செலவினங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மாநில அரசு தீவிரமாகச் சீரமைத்து வருவதாக அமிருடின் ஷாரி முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக்குழு வாரியம், பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளையும் தரவுகளையும் ஆராய்வதற்காகத் தற்போது தீவிரக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி விநியோக நெருக்கடியின் தாக்கத்திலிருந்து, சிலாங்கூர் மக்களையும் மாநிலத் தொழில்துறையையும் பாதுகாப்பதற்காக, கடந்த மாதம் 131 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்பு’ திட்டத்தை மாநில முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
உணவு விநியோகத்தை வலுப்படுத்துவதற்கும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குமான முதற்கட்ட நடவடிக்கையாக, இந்தத் தொகுப்பின் திட்டங்கள் ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தொழில்துறை சார்ந்தவர்களுக்கு மிகவும் இலக்கு வைக்கப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக, அவர்களுடனான கலந்துரையாடல் அமர்வுகளை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளதாக சிலாங்கூர் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் (EXCO) இங் ஸீ ஹான் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
மேலும், அனைத்துத் தொழில்துறை பிரிவுகளிலும் உள்ள சவால்களுக்குச் சிறந்த தீர்வுகளைக் கண்டறியும் நோக்கில், 'இன்வெஸ்ட் சிலாங்கூர்' (Invest Selangor Bhd) நிறுவனம் வணிக வாரியங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.








