வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உயிரிழப்பு

24 மே 2026, 3:34 AM
வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உயிரிழப்பு

வாஷிங்டன், மே 24: அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் (White House) பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

காயமடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அமெரிக்க ரகசிய சேவை (United States Secret Service) பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சனிக்கிழமை மாலை வேளையில் வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள 17-ஆவது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் அமைந்திருந்த பாதுகாப்புச் சோதனைச் சாவடியை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடந்து வந்துள்ளார்.

திடீரென அவர் தனது பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சுடத் தொடங்கியுள்ளார். சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள், தற்காப்பிற்காக உடனடியாக திருப்பிச் சுட்டதில் அந்த நபர் படுகாயமடைந்தார்.

இதற்கிடையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் எந்தளவிற்குத் தீவிரமானது என்பதும், பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் அவர் காயமடைந்தாரா அல்லது சந்தேக நபர் சுட்டதில் காயமடைந்தாரா என்பது குறித்தும் இன்னும் தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

சம்பவம் குறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் பேசிய சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னதாகவே அவர் இப்பகுதிகளுக்கு வரக்கூடாது என்பதற்கான 'விலகியிருக்கும் உத்தரவு' (Stay-away order) அவருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இச்சம்பவம் நடந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை உள்ளேதான் இருந்தார் என்றும் ரகசிய சேவை பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.