ஈரான் உடனான முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது; அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி

16 ஜூன் 2026, 3:29 AM
ஈரான் உடனான முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது; அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி

வாஷிங்டன், ஜூன் 16 – அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சிமாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் "மிக விரைவில்" பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (JD Vance) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்த முதற்கட்ட விவரங்களை ஊடகங்களுக்குப் பகிர்ந்துள்ளனர்.

அவர்களின் தகவல்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படும் அதே நாளில், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) சர்வதேசப் போக்குவரத்திற்காக முழுமையாக மீண்டும் திறக்கப்படும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் பாகர் காலிபாஃப் ஆகியோரால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மின்னணு முறையில் (Electronically) கையெழுத்திடப்பட்டுள்ளது. இது சுமார் ஒன்றரை பக்கங்களைக் கொண்ட ஒரு பொதுவான கட்டமைப்பு ஆவணம் என்று துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விவரித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் முதல் பத்தியில், ஈரான் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்குக் கட்டுப்படும் என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்துவது இதில் அடங்கும் என்றும் வான்ஸ் கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என்பதற்கான சரிபார்க்கக்கூடிய உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது என்றும், எதிர்வரும் நாட்களில் தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் மூலம் கூடுதல் விவரங்கள் இறுதி செய்யப்படும் என அவர் விளக்கினார்.

இந்த தற்காலிக ஒப்பந்தம் தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் அறுபது நாட்களுக்கு நீட்டிக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும். இந்த அமைதி முயற்சியின் கீழ் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்று இந்த பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகளை வாபஸ் பெறுவது ஒரு நிபந்தனை அல்ல என்று அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்காப்புக்காகச் செயல்படும் உரிமையை இஸ்ரேல் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அவர்கள் கூறினர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களில் இஸ்ரேலிய படைகள் "தேவைப்படும் வரை" தொடர்ந்து நீடிக்கும் என்றும், தாக்குதல்களுக்கு எதிராகச் செயல்படும் சுதந்திரத்தை இஸ்ரேல் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் கூறினார்.

மேலும், ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நெதன்யாகுவின் இந்த உரைக்குப் பின்னரும் லெபனானில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் அங்கு இன்னமும் பதற்றம் நீடிக்கிறது.

மறுபுறம், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய அதிபர் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் ஏற்கனவே நகரத் தொடங்கிவிட்டதாகத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானிய தரப்பில், அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் காரிபாபாடி ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். கத்தார் நாட்டின் தூதர்கள் டெஹ்ரானில் மேற்கொண்ட பதினைந்து மணி நேரத் தீவிரப் பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த முதற்கட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

ஈரான் அரசு ஊடகங்கள் இதனைத் தங்களின் நாட்டின் வெற்றியாகக் கொண்டாடி வரும் வேளையில், ஈரானிய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா மீது தங்களுக்கு இன்னும் "ஆழ்ந்த அவநம்பிக்கை" இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு ஆரம்பக் கட்ட நடவடிக்கை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக வரவேற்றுள்ளனர். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெறக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், இந்த அறிவிப்பு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகும் என்று பாராட்டியுள்ளார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.