ஷா ஆலம், மே 20 - மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யகூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்கள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கெடா மாநிலத்தில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாடாங் தெராப், யான், பெண்டாங், கோலா மூடா, சிக் மற்றும் பாலிங் ஆகிய இடங்களுக்கும், பெர்லிஸ் மாநிலம் முழுமைக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜோகூர் மாநிலத்தில் குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய பகுதிகளும் இந்த மோசமான வானிலை எச்சரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சரவாக் மாநிலத்தில் ஸ்ரீ அமான், சிபு (செலங்காவ்), முக்கா (முக்கா), கப்பிட் (சோங், கப்பிட் மற்றும் பெலகா), பிந்துலு (தாதாவ்), மிரி (தெலாங் ஊசான் மற்றும் மருடி) ஆகிய மாவட்டங்களுடன் லிம்பாங் பகுதியிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
அதே வேளையில், சபா மாநிலத்தில் தம்புனான் உட்பட்ட உட்பகுதி, மேற்கு கடற்கரை, சண்டாக்கான் (கினபாத்தாங்கான் மற்றும் சண்டாக்கான்), கோத்தா மருடு, கூடாட் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான தீவிரத்துடன் பலத்த மழை பெய்து, அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படும் போது மட்டுமே இந்த இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கையானது ஒரு குறுகிய கால அறிவிப்பு என்றும், இது வெளியிடப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







