ஷா ஆலம், மே 20 – இன்று அதிகாலை ஷா ஆலம், செக்ஷன் 14-இல் அமைந்திருக்கும் விஸ்தா ஆலம் (Vista Alam) அடுக்குமாடி கட்டடத்திலிருந்து விழுந்த, சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3.07 மணியளவில் ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே அந்த அதிகாரி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்தத் துயரமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மறைந்த அதிகாரியின் குடும்பத்தினருக்குச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை படை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.
அதே வேளையில், காவல்துறையினரின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து தேவையற்ற வதந்திகளையோ அல்லது ஊகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








